கரூர்: தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அருணா ஜெகதீசன் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க அவகாசம் தேவை என கேட்டிருக்கிறார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று முன்தினம் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்த பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என அடுத்தடுத்து பலரும் மயக்கம் போட்டு விழுந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு 6 கி.மீ தொலைவில் உள்ள அரசு மருத்துவமனையிலும், கோவை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் சிலர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டனர். மற்றவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள், 17 பெண்கள், 14 ஆண்கள் என 40 பேர் உயிரிழந்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் இன்று காலை மரணமடைந்துள்ளார். எனவே பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அருணா ஜெகதீசன் நேற்று கரூர் வந்தடைந்தார். அங்கு சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட அவர், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அவர்கள் கதறி அழுதுக்கொண்டே நடந்த சம்பவத்தை விவரித்தனர். பொதுமக்கள் சிலர், விசாரணை அனைத்து தரப்பினரிடமும் மேற்கொள்ள வேண்டும். ஒரு தரப்பினரிடம் மட்டும் மேற்கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர். நிச்சயமாக அனைத்து தரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என அருணா ஜெகதீசன் உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், விசாரணை விரிவாக மேற்கொள்ள வேண்டி இருப்பதால், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்றும், எனவே போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்க இருப்பதாக கரூரில் பேட்டிளித்த அருணா ஜெகதீசன் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நேற்று முன்தினம் நள்ளிரவு செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், “விஜய் 11 மணிக்கு கரூர் வருவார் என்று, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் 6 மணி நேரம் தாமதமாக வந்திருந்தார். எனவே அவரை காண குவிந்திருந்த மக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் தவித்திருந்தனர். விஜய் வந்தவுடன் அவரை பார்க்க முந்தியடித்தபோது நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. எனவே சில மயக்கமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்” என்று கூறியிருந்தார்.
எல்லாம் சரிதான், ஆனால் ஏன் காவலர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த டிஜபி, “10,000 பேருக்கு அனுமதி கேட்டார்கள். நாங்கள் கூடுதலாகவே காவலர்களை போட்டிருந்தோம்” என்று கூறியிருந்தார்.