மன்னிப்பை கற்றுக் கொடுத்தவர் எனது அப்பா… அவரை ரொம்ப மிஸ் பண்ணறேன்… ராகுல்காந்தி உருக்கம்.!!

தனது தந்தை ராஜீவ் காந்தி மன்னிப்பின் மதிப்பை கற்றுத்தந்தார் என ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக, தமிழ்நாட்டிற்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். அவரின் 31வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். நீலகிரியில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார், அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது. இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதர் அவர். எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தையாக இருந்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “எனது தந்தை மன்னிப்பு மற்றும் அனுதாபத்தின் மதிப்பை எங்களுக்கு கற்றுத்தந்தார். நான் அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.