தீபாவளி பரிசாக சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட முகேஷ் அம்பானி… ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!!

மும்பை: ‘தீபாவளி முதல் முக்கிய நகரங்களில் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும்’என்று ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுகுழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக மாதத்திற்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்துகின்றனர். ஜியோ 5ஜி உலகிலேயே மிகப் பெரிய மற்றும் அதிநவீன 5ஜி நெட்வொர்காக இருக்கும்.

கடந்த ஆண்டு 2.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி 75 % அதிகரித்து ரூ.25 ஆயிரம் கோடியைக் கடந்துள்ளது. இந்தாண்டில் நாட்டின் ஏற்றுமதியில் 8.4% ஏற்றுமதியில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்கு வகித்துள்ளது. கடந்த ஆண்டு 6.8% ஏற்றுமதியாகத்தான் இருந்தது. நாட்டிலேயே அதிகமாக வரிசெலுத்தும் நிறுவனமாக ரிலையன்ஸ் இருக்கிறது. ரூ.1.88 லட்சம் கோடி வரியாக அரசுக்கு செலுத்துகிறோம். வரும் அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்பட உள்ள தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும்.

5ஜி சேவைக்காக ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு டிசம்பருக்குள் ஒவ்வொரு நகரிலும் 5ஜி சேவை கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். சமீபத்தில் நடந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதிகளவிலான ஏலத்தை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.