மதுரை: தவெகவின் இரண்டாவது மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
திமுக அண்ணா பாதையில் இருந்து விலகிவிட்டதாகச் சாடிய ஆதவ் அர்ஜுனா, திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக விமர்சித்தார். மேலும், தவெக மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி பல்வேறு தடைகளை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார்.
தவெகவின் 2வது மாநாடு இன்று மதுரையில் பிரம்மாண்டமான முறையில் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்குச் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நடக்கும் இந்த மாநாடு அரசியல் ரீதியாகக் கவனம் பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் திரண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுக மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். அண்ணா பாதையிலிருந்து திமுக விலகிவிட்டதாகச் சாடிய ஆதவ் அர்ஜுனா, திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகச் சாடினார்.
மேலும், தனது தந்தையிடம் இருந்து ஸ்டாலின் ஊழல் செய்வதை மட்டும் கற்றுக்கொண்டார் என்றும் தனது குடும்பம் மட்டும் வளர வேண்டும் என்று அரசியல் செய்கிறார் என்றும் ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார். மேலும், ஊழல்தான் முக்கியம், சமூக நீதி முக்கியம் இல்லை என்று ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்றும் சாடினார். மதுரை மாநாட்டிற்குப் பெரிய தடைகளை அமைச்சர் மூர்த்தி செய்ததாகவும் தவெக கூட்டத்தைத் தடுக்க பார்த்ததாகவும் ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
இந்த மாநாட்டில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “1967ல் தம்பி தலைமையேற்க வா என்றார் அண்ணா.. அதேபோல இந்த மதுரை மண்ணில் இருந்து சொல்கிறேன். தமிழக அரசியலில் 1967, 1977 தேர்தல்களில் நடந்த மாற்றம் மீண்டும் 2026ல் நடக்கும்.
எதற்காக மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர் போட்டோவை வைத்துள்ளனர் என பலரும் கேட்டார்கள். அதற்கான பதிலை இப்போது சொல்கிறேன். 1967ல் சமூக நீதிக்கான அரசு.. எல்லாருக்குமான அரசு உருவானது. எல்லா சாதி, மதம் மக்களுக்கான ஊழல் இல்லாத அரசை உருவாக்கினார்.. அதுவே திராவிடம். அந்த வழியில் கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோர் 1971ல் தேர்தலை எதிர்கொண்டனர். அப்போது மிக பெரிய வெற்றியை அடைந்தனர்.
இருப்பினும், அதன் பிறகு சமூக நீதி, ஊழலற்ற நிர்வாகம் என்தில் இருந்து கருணாநிதி விலகி சென்றுவிட்டார். அன்று குரல் கொடுத்த எம்ஜிஆர், புதிய கட்சியை உருவாக்கினார். 1976ல் எம்ஜிஆர் மிக பெரிய வெற்றியை பெற்றார். அண்ணாவின் குறிக்கோளை கருணாநிதி தனது குடும்பத்திற்காக மாற்றிய போது, எம்ஜிஆர் உருவானார். இன்றும் கிட்டத்தட்ட அதே சூழல் தான்.
கருணாநிதியிடம் இருந்து ஊழல் செய்யும் பாடத்தை முதல்வர் ஸ்டாலின் கற்று கொண்டு இருக்கிறார். கருணாநிதி தன்னை சுற்றி இருக்கும் 10 குடும்பங்களுக்கான ஊழல் ராஜ்யத்தை உருவாக்கினார். ஸ்டாலின் அந்த 10 குடும்பங்களை ஒழித்து தனது குடும்பத்திற்கு மட்டும் ஊழல் ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். அவர் சமூக நிதியை மறந்துவிட்டார். சாதி வாரி கணக்கெடுப்பை கூட நடத்த மறுக்கிறார்.
இன்று மதுரையில் இருக்கும் அமைச்சர் மூர்த்தி இந்த மாநாட்டிற்கு எவ்வளவு தடைகளை உருவாக்கினார் தெரியுமா? அத்தனை தடைகளையும் உடைச்சு நிற்கும் இந்த கூட்டம் தான் தவெக கூட்டம். மூர்த்தி என்ன சமூக நீதி காவலரா? ஒட்டுமொத்த ஊழலையும் ஒரு குடும்பத்திற்கு கொடுக்கும் அரசியல்வாதி தான் அவர். ஸ்டாலின் திமுக என்றோ அண்ணா குறிக்கோளில் இருந்து விலகிவிட்டது. அண்ணா கொள்கையை கடைப்பிடிக்கக்கூடிய ஒரு தலைவர் விஜய் தான்” என்றார்.