6,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் அந்நிறுவனத்தில் எந்த நிலையில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிந்து கொள்ளலாம்.
உலகின் நம்பர்-1 மென்பொருள் நிறுவனம், உலகின் மதிப்புமிக்க பிராண்ட் என பல்வேறு பெருமைகளுக்கு உரித்தான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி, உலகின் பல்வேறு நாடுகளிலும் கிளை பரப்பி செயல்பட்டு வருகிறது. உலகின் நம்பர் 1 பணக்காரராக திகழ்ந்த பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலனால், 1075-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் மென்பொருள் மேம்பாடு, கணினி வன்பொருள், மின்னணுவியல், சமூக வலைப்பின்னல் சேவை, கிளவுட் கம்ப்யூட்டிங், வீடியோ கேம்கள், இணையம்,கார்ப்பரேட் மூலதனம் என பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஏப்ரல் 2019-ல், ஒரு டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை எட்டியது. இந்நிலையில், மைக்ரோசாஃப் நிறுவனம் அதன் ஒட்டுமொத்த மனிதவளத்தில் 3% அளவுக்கு ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையிழப்பை எதிர்கொள்ள உள்ளனர். சுமார் 6,000 பேருக்கு மேல் வேலையிழக்கக் கூடும் என தெரியவந்துள்ளது. மேலாண்மை மற்றும் செயல்பாடுகளை நெறிப்படுத்தும் பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களே இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடும்.மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டு 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. ஆனால் இவர்கள் தொடக்க நிலையில், போதிய திறமையின்மை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். ஆனால் தற்போதைய பணி நீக்க நடவடிக்கையில் மத்திய நிலையில் உள்ள ஊழியர்கள் இடம்பெறுவார்கள் என்றும், இந்த பணிநீக்கங்கள் கட்டமைப்பு ரீதியானவை என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு ஜூன் வாக்கில் மைக்ரோசாஃட் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிகை 2.28 லட்சம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.