மேயரின் ராஜினாமா ஏற்பு… மதுரை மாநகராட்சி அவசர கூட்டம்.!!

துரை: மதுரை மாநகராட்சியில் அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்து கொண்டிருக்கின்றன. முறைகேடு புகாரில் மேயர் இந்திராணி கணவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

தற்போது இந்திராணியும் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்நிலையில், புதிய மேயரை தேர்வு செய்வதில் உள்கட்சி பூசல் பிரச்சனை தடையாக உள்ளது. பரபரப்பான நிலையில் மதுரை மாநகராட்சி அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மதுரை மேயரிந் ராஜினாமா ஏற்கப்பட்டது.

மதுரை மாநகராட்சியில் சுமார் 100 வார்டுகள் உள்ளன. அங்கு பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி என்று 2 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட ஈகோ மாநகராட்சி நிர்வாகத்திலும் எதிரொலித்தது. இதுதவிர மாநகர செயலாளர் தளபதி ஆதரவாளர்களும் தனி அணியாக செயல்பட்டு வந்தனர். இதனால் மாநகராட்சி நிர்வாகத்தில் கோஷ்டி பூசல் நிலவி வருகிறது.

2022 நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அங்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர் இந்திராணி மேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் இருந்தே இந்திராணியின் கணவன் பொன் வசந்த் தலையீடு அதிகமாக இருப்பதாக புகார் எழுந்தது. மாநகராட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளுக்கு பொன் வசந்த் காரணம் என்று கூறப்பட்டது.

பொன் வசந்த் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினார். இந்திராணி, பொன் வசந்த் இருவருக்கும் எதிர்ப்புகள் எழுந்தது. திமுக கவுன்சிலர்களே அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். பொன் வசந்த் மற்றும் இந்திராணியை அமைச்சர் பிடிஆர் பலமுறை கண்டித்தார். இதேபோல துறை அமைச்சர் கே.என். நேரு, திமுக தலைமை பலமுறை எச்சரித்தார்கள்.

ஒருகட்டத்தில் பொன் வசந்த் பிடிஆர் உள்ளிட்டோருக்கு எதிராக செயல்பட தொடங்கினார்கள். கடந்த வருடம் கோவை மாநகராட்சி, திருநெல்வேலி மாநகராட்சி மேயர்கள் மாற்றப்பட்டனர். அப்போதே மதுரை மாநகராட்சி மேயரும் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மதுரை மாநகராட்சியில் நாளுக்கு நாள் சர்ச்சை வெடித்து கொண்டிருந்தது.

ஒருகட்டத்தில் அமைச்சர்கள், திமுக தலைமை அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட தொடங்கினார்கள். மதுரை மாநகராட்சியில் சுமார் ரூ.150 கோடிக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் பொன் வசந்த் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். தொடர்ந்து இந்திராணி நேற்று முன்தினம் தன் மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதேபோல மண்டல தலைவர்கள், நிலைக் குழு தலைவர்களும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். புதிய மேயரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதில் அமைச்சர்கள், திமுக தலைமையிடம் மாறுபட்ட கருத்து நிலவி வருகிறது. முக்கியமாக பிடிஆர், மூர்த்தி தரப்பு மாறுபட்ட கருத்துடன் இருப்பதால் புதிய மேயரை உடனடியாக தேர்வு செய்வதில் சிக்கல் நிலவுகிறது.

இந்நிலையில் மதுரை மாநராட்சியின் அவசர கூட்டம் இன்று காலை நடைபெற்றறது. துணை மேயர் நாகராஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்திராணியின் ராஜினாமா ஏற்கப்பட்டதையடுத்து, 4 நிமிடத்தில் கூட்டம் நிறைவடைந்தது. புதிய மேயர் தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட நிலையில் அதுதொடர்பான ஆலோசனை நடைபெறவில்லை.

சிபிஎம் கட்சியின் நிர்வாகியும், துணைமேயருமான நாகராஜனுக்கு பொறுப்பு மேயர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.