நாடு முழுவதும் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் முக்கிய மாவோயிஸ்ட் தலைவன் சரணடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் சில மாநிலங்களில் ஆயுதமேந்திய போராட்டக்குழுவான மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வரும் நிலையில், மாவோயிஸ்டுகளை அடக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில் தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா என பல மாநிலங்களில் மாவோயிஸ்டு வேட்டை நடைபெற்றது. இதில் முக்கிய மாவோயிஸ்டு தலைவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் மாவோயிஸ்டுகள் சரணடையவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் அரசு பல்வேறு வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.
இதனால் மாவோயிஸ்டுகள் பலரும் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட் நடவடிக்கை அதிகம் உள்ள கட்ச்ரோலி பகுதியில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவனாக செயல்பட்டு வந்த சோனு என்கிற மல்லோஜூல வேணுகோபால ராவ் தனது ஆயுதங்களை ஒப்படைந்து சரணடைந்துள்ளார். அவருடன் அவரது ஆதரவாளர்களான 60 மாவோயிஸ்டுகளும் சரணடைந்துள்ளனர்.