சென்னையை புரட்டி போட்ட விட்டு கரையை கடந்த மாண்டஸ் புயல் – மீட்பு பணிகள் தீவிரம்..!

மிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்துவருகிறது.

கடந்த நவம்பர் மாதம் இரண்டு காற்றழுத்த தாழ்வுமண்டலங்கள் உருவான நிலையில் அவை அனைத்தும் வலுவடைந்து பெரிய சேதம் ஏற்படுத்தாமல் இருந்தது.

ஆனால், மீண்டும் கடந்த 5-ந் தேதி வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டது. இது தீவிர புயலாக மாறி பின்னர் புயலாக வலுவிழந்தது.

இதனால், தமிழகத்தில் பல பகுதியில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்தது. இந்த புயலால் ஏற்படும் சேதத்தை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் நேற்று 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடப்பதற்காக நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் புயல் கரையை கடக்க ஆரம்பித்ததால் மணிக்கு 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், சென்னை முழுவதும் பலத்து சூறைக்காற்று வீசி வருகிறது.

இதைத்தொடர்ந்து, மாண்டஸ் புயல் இரவு 2.30 மணி அளவில் ,முழுவதுமாக கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது,

“சென்னை மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்தது. இது, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்.

தமிழகத்தின் வட உள் மாவட்டங்களின் வழியே கடந்து செல்லும். தற்போது 30 கி.மீட்டர் வேகத்தில் தெற்கு-தென் கிழக்கே நகர்ந்து வருகிறது. அடுத்த 1 மணி நேரத்தில் புயலின் பின்பகுதி முழுமையாக கரையை கடக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

புயலால் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று வீசியது. இதில், மரங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்தன. இதனை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், புயல் கரையை கடந்த நிலையிலும், தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.