அரசு மருத்துவமனைகளில் முக்கிய மாற்றம்- அதிகாரிகள் ஆய்வு!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகளைக் களைந்து, ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.மருத்துவமனைகளைக் கண்காணித்து, அங்குள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண 50 நோடல் அதிகாரிகளை நியமித்து தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்தில் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய் நேரில் சென்று ஆய்வு நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, சென்னை முதல் தூத்துக்குடி வரை தமிழகத்தின் 31 மாவட்ட முதன்மை மருத்துவமனைகளில் நிலவக்கூடிய மருத்துவக் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் அலுவலகம் (CMO) ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில், அதிர்ச்சியூட்டும் சில கள நிலவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தின் ஒதுக்குப்புறமான இடங்களில், மாலை நேரங்களில் சில காவலாளிகள் மற்றும் வார்டு ஊழியர்கள் மது மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், வெளியிலிருந்து அதிக விலைக்கு உணவு வாங்க வேண்டிய கட்டாயச் சூழல் நிலவுகிறது. மருந்துகளை வாங்குவதற்குப் பொதுமக்கள் நீண்ட நேரம் வெயிலில் வரிசையில் நிற்க வேண்டிய அவலநிலை உள்ளது.இந்தக் குறைபாடுகளைக் களைவதற்காகத் தமிழக அரசு தற்பொழுது ஒரு புதிய அதிரடி நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். அங்கு கண்டறியப்படும் பிரச்சினைகள் சரி செய்யப்படுவதற்கு ‘முன்பு’ (Before) மற்றும் சரி செய்யப்பட்ட ‘பின்பு’ (After) எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்களுடன் கூடிய விரிவான அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தற்போது நியமிக்கப்பட்டுள்ள 50 நோடல் அதிகாரிகள், மக்களையும் அரசு அதிகாரிகளையும் இணைக்கும் ஒரு பாலமாகச் செயல்படுவார்கள். மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து இவர்கள் மேற்கொள்ளவிருக்கும் முக்கியப் பணிகள், மருத்துவமனை வளாகங்களின் தூய்மை, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை மேம்படுத்துதல். நோயாளிகளின் உதவியாளர்களுக்கான தங்கும் வசதிகள், மருத்துவக் கட்டடங்கள் மற்றும் சுற்றுப்புறப் பாதுகாப்பை உறுதி செய்தல், மருத்துவ உபகரணங்களின் பராமரிப்பு மற்றும் விநியோகத்தைக் கண்காணித்தல் ஆகியவையாகும்.அரசு மருத்துவமனைகளில் கண்டறியப்பட்ட இந்த அடுக்கடுக்கான குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனச் சுகாதாரத்துறைக்கு முதலமைச்சர் அலுவலகம் கடுமையான எச்சரிக்கையையும், உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. அதன்படி மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள், சென்னை ஓமந்தூரார், கஸ்தூரிபாய் மற்றும் எழும்பூர் மருத்துவமனைகளில் நோயாளிகளின் நலன் கருதி, அம்மா உணவகம் போன்ற குறைந்த விலை உணவகங்களை அமைக்க வேண்டும். மேலும், சுயஉதவிக் குழுக்களுக்கு இலவச இடங்களை வழங்கி, சிறுதானிய உணவுக் கடைகளை ஏற்படுத்த வேண்டும். மருந்து வாங்கும் இடங்களில் பொதுமக்கள் வெயிலில் காய்வதைத் தவிர்க்க, கூடுதல் மருந்து வழங்கும் கவுண்டர்கள் மற்றும் அவர்கள் அமர்ந்து செல்வதற்கான காத்திருப்பு அறைகளை அமைக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கான புற்றுநோய் பரிசோதனை மற்றும் அதற்கான சிகிச்சை மையங்களை மேலும் விரிவாக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.