அணுகுண்டு பட்டாசில் பெட்ரோல் ஊற்றி வெடித்த மதுரை இன்ஸ்டாகிராம் இளசுகள்.!!

துரை ஆரப்பாளையம் பகுதியில், அணுகுண்டு பட்டாசு மாலையில் பெட்ரோல் ஊற்றி வெடிக்கச் செய்து, அதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட விவகாரத்தில் 3 இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மாநகராட்சி ஆணையாளர் வீட்டின் முன்பாக போலீஸ் காரை கேலி செய்தும், அரசு பேருந்தை நிறுத்தி பயணிகளை அச்சுறுத்திய இளைஞர்களையும், உசிலம்பட்டி பகுதியில் வாகனங்கள் மீது பட்டாசு வீசிய இளைஞர்களையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையின் போது, மதுரை ஆரப்பாளையம் பகுதியில் சில இளைஞர்கள், அணுகுண்டு பட்டாசுகளை மாலையாக அணிந்து, அதில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி, அதன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பதிவிட்டனர். இந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்தனர். பலர் கருத்துக்களில் இதை எதிர்த்ததோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதேபோல், மதுரை தமுக்கம் சாலை மற்றும் உசிலம்பட்டி பகுதிகளிலும் சில இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக, மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் உத்தரவின் பேரில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில், மதுரை மாநகர் தத்தனேரி கீழவைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் சந்துரு, அரசரடி பகுதியைச் சேர்ந்த முத்துமணி மற்றும் வீரணன் ஆகிய மூன்று பேர் மீது செல்லூர் காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், லோகேஷ் சந்துரு மற்றும் முத்துமணி ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், மதுரை தமுக்கம் சாலையில் மாநகராட்சி ஆணையாளர் வீட்டின் முன்பாக, காவல்துறையின் வாகனத்தை கேலி செய்தும், அரசு பேருந்து முன்பாக நிறுத்தி பயணிகளை அச்சுறுத்திய இளைஞர்களையும் தல்லாகுளம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதேபோல், மதுரை உசிலம்பட்டி பகுதியில் சாலையில் சென்ற வாகனங்கள் மீது பட்டாசுகளை வீசிய இளைஞர்களையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாசுகளைப் பயன்படுத்தி, அதை வீடியோவாக வெளியிட்ட விவகாரத்தில் இதுவரை 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.