சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார்.
பின்னர் முனீஷ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவி வகித்து வந்தார்.
பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் 32வது தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவியேற்றார். இவர் கடந்த 1960ம் ஆண்டு செப்டம்பர் 13ம் ராஜஸ்தானில் பிறந்தவர். ராஜஸ்தான் அரசு வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தி துறையின் வழக்கறிஞராகவும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற இவர், 2019ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
முனீஸ்வர் நாத் பண்டாரி பதவி வகித்தபோது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது, கோயில்களில் வேட்டி அணிந்து வரக் கோரிய வழக்கில் நாடு முக்கியமா, மதம் முக்கியமா என கேள்வி எழுப்பியது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதை ரத்து செய்தது, விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டது போன்ற பல முக்கிய வழக்குகளில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் 62 வயது நிறைவு பெறுவதால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, இன்றுடன் ஓய்வு பெறுகிறார். பாணி ஓய்வுக்கு பின்னர், அன்னிய செலாவணி மோசடி தடுப்புச்சட்ட வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராக பதவியேற்கிறார். இதனிடையே இன்று முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு பிரிவு உபசார விழா நடக்கவுள்ளது. இந்த விழாவில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி ஓய்வு பெறுவதால், பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட போது, பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply