சென்னை ஹைகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று பதவியேற்கிறார்..!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி நேற்று ஓய்வுபெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.துரைசாமி இன்று காலை பொறுப்பேற்கிறார்

கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்றார்.

முதலில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், பிறகு தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

நேற்றுடன் அவருக்கு 62 வயது நிறைவடைந்ததையடுத்து நேற்று மாலையுடன் ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து நேற்று மாலை உயர்நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு பிரிவு உபசார பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பிரிவு உபசார நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் வழக்கறிஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

முனீஸ்வர் நாத் பண்டாரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ள நிலையில், ஓய்வுக்கு பிறகு அந்நிய செலவாணி மோசடி தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராக பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கிடையே உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி இன்று அவர் பொறுப்பு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.இவர் ஏற்கனவே நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட போது, பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் உத்தரவின்படி, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று காலை 10 மணியளவில் பதவி ஏற்க உள்ளார். இந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சி தலைமை நீதிபதி சேம்பரில் நடைபெற உள்ளது. இதன்பின்னர், பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமிக்கு சக நீதிபதிகள், மத்திய-மாநில அரசு வக்கீல்கள் வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள்.

அதைத் தொடர்ந்து, இதுவரை தலைமை நீதிபதி விசாரித்து வந்த பொதுநல வழக்கு உள்ளிட்ட வழக்குகளை, ஹைகோர்ட்டின் முதல் அமர்வில் அமர்ந்து சக நீதிபதியுடன் சேர்ந்து பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி விசாரிப்பார். தலைமை நீதிபதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து சென்னை ஹைகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியை இதுவரை இந்திய ஜனாதிபதி நியமிக்கவில்லை. கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டுகளின் மூத்த நீதிபதிகள் இருவரில் ஒருவரை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக விரைவில் ஜனாதிபதி நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.