சென்னை : ”ஆவினில் நெய் வாங்குவது போல, ஹெல்த் மிக்ஸ் வாங்குவோம்.
நாளைக்கே தயாரித்து தந்தால் கூட வாங்க தயாராக இருக்கிறோம்,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
ஆவின் நிறுவனம் வாயிலாக, ‘ஹெல்த் மிக்ஸ்’ தயாரிக்கப்பட்டு, வெளியிடுவதற்கான ஏற்பாடு நடந்து வந்தது. கர்ப்பிணியருக்கு வாங்கி வழங்குவது தொடர்பாக, மூன்று முறை ஆவின் அதிகாரிகளுடன், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். ஆனால், தனியாரிடம் கொள்முதல் செய்வதற்காக, ஆவின் ஹெல்த் மிக்ஸ் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதை வெளியிட, முதல்வர் ஸ்டாலின் தேதி கிடைக்கவில்லை என்று, ஆவின் அதிகாரிகள் கூறி வந்தனர். இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் நேற்று வெளியானது.
இதையடுத்து, சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன், பால் வளத் துறை அமைச்சர் நாசர், ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:கர்ப்பிணியருக்கு, 2018 முதல் ‘புரோ ஹெல்த் மிக்ஸ்’ என்ற சத்துமாவு வழங்கப்படுகிறது. ஆவினில், குறைந்த விலையில் ஹெல்த் மிக்ஸ்வாங்கலாம் என, திட்ட குழு உறுப்பினர் கூறினார். இதையடுத்து, இரண்டு, மூன்று முறை, ஆவின் அதிகாரிகளிடம் பேச்சு நடத்தப்பட்டது. ‘ஆவினில் ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கவில்லை’ என, அதிகாரிகள் கூறி விட்டனர்.
ஆவினில் ஹெல்த் மிக்ஸ் தயாராக இருப்பது போலவும், அதை மக்கள் நல்வாழ்வுத் துறை வாங்க மறுப்பது போலவும் செய்திகள் வருகின்றன. கர்ப்பிணியருக்கு வழங்கப்படும் எட்டு வகையான பொருட்களில், ஆவின் நெய் இடம் பெற்றுள்ளது. இதை கொள்முதல் செய்ய, ஆவின் நிறுவனத்திற்கு 34 கோடியே 49 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க, எந்த நிறுவனம் ‘டெண்டர்’ எடுத்தாலும், அதில் ஆவின் நெய் இடம்பெற வேண்டும் என்ற விதி உள்ளது. கர்ப்பிணியருக்கான ஹெல்த் மிக்சைக் காட்டிலும், ஆவின் ஹெல்த் மிக்ஸ் மாறுபட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, 32 ‘புரோட்டின்’ சத்துக்கள் அடங்கிய ஹெல்த் மிக்ஸ், கர்ப்பிணியருக்கு வழங்கப்படுகிறது.
இதேபோன்று, ஹெல்த் மிக்ஸ் தயாரித்து வழங்க முடியுமா என, ஆவின் அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம்; முயற்சி செய்வதாக கூறியுள்ளனர். ஆவினில் நெய் வாங்குவது போல, ஹெல்த் மிக்ஸ் வாங்குவோம். ஆவின் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பிருந்தால், அடுத்தாண்டு முதல் வாங்கலாம். ‘டெண்டர்’ இன்னும் பைனல் ஆகவில்லை. ஆவின் நிறுவனம் நாளைக்கே தயாரித்து தந்தால் கூட வாங்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.
பால் வளத் துறை அமைச்சர் நாசர் கூறியதாவது:கடந்த சட்டசபை கூட்டத்தில், 32 அறிவிப்புகளை வெளியிட்டோம். அதில், 20வது அறிவிப்பாக, ஆவின் நிறுவனத்தால் ஹெல்த் மிக்ஸ் தயாரித்து வெளியிடப்படும் என கூறப்பட்டது. இது சிறுதானியங்கள், தானியபயிர்கள், பால் பவுடர் ஆகியவற்றுடன் பாரம்பரிய பொருட்களை கொண்ட சத்துமாவு கலவையாக இருக்கும். இது கர்ப்பிணியருக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து பவுடரில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இனிமேல் தான் ஆவின் ஹெல்த் மிக்ஸ் தயாரிக்க போகிறோம். இது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் வகையில் இருக்கும். இதற்கு சுகாதார சான்று பெற வேண்டும்; பலவகை ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னரே, ஹெல்த் மிக்ஸ் வெளியிட முடியும். அதற்கான பணிகள் தற்போது நடக்கின்றன. இவ்வாறு அமைச்சர் நாசர் கூறினார்.
சென்னை : ”ஆவினில் நெய் வாங்குவது போல, ஹெல்த் மிக்ஸ் வாங்குவோம். நாளைக்கே தயாரித்து தந்தால் கூட வாங்க தயாராக இருக்கிறோம்,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்
Leave a Reply