பிரேசில் அதிபர் தேர்தலில் இடது சாரி வேட்பாளர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றி..!!

பிரேசில் : பிரேசில் அதிபருக்கான தேர்தலில் 50.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 77 வயதான இடது சாரி வேட்பாளர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றிபெற்று இருக்கிறார்.

பிரேசில் அதிபருக்கான தேர்தலில் அதிபர் ஜெயீர் போல்சனரோ மற்றும் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த 2-ம் தேதி நடந்த தேர்தலில் 2 வேட்பாளர்களும் 50 விழுக்காடு வாக்குகளை பெறவில்லை. பிரேசில் தேர்தல் நடைமுறையின் படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 50% அதிகமான வாக்குகள் பெற தவறினால் அதிக வாக்குகளை பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையில் 2-ம் சுற்று தேர்தல் நடத்த வேண்டும்.

அதன்படி நேற்று நடைபெற்ற 2-ம் சுற்று தேர்தலில் விறுவிறுப்பான வாக்கு பதிவு நடைபெற்றது. முடிவில் 50.9 விழுக்காடு வாக்குகளை பெற்று லூயிஸ் இனாசியோ லூலா பிரேசில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லூயிஸ் இனாசியோ லூலா மொத்தம் 6 கோடி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை தன்வசமாக்கி பிரேசிலின் புதிய அதிபராக தேர்வாகியுள்ளார். தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ 49.1 விழுக்காடு வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார். அவருக்கு 5 கோடி 82 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து விரைவில் பிரேசில் அதிபராக 3-வது முறையாக பதிவி ஏற்க இருக்கிறார் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா.