கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மருத்துவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி முயற்சி செய்வதாக அந்த மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர்.
அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆர்.ஜி.கார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு உட்சபட்ட தண்டனை பெற்று தரக்கோரியும் மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய சஞ்சய் ராய் என்ற ஊர்க்காவல் படை வீரர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ள சிலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுவதால் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. கொல்கத்தாவில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமாரிடம் 3வது நாளாக விசாரணை மேற்கொண்டனர். பெண் மருத்துவரின் கொலையில் மருத்துவமனை உயர் அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக அவரது பெற்றோரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
மறுபுறத்தில் மருத்துவரின் போராட்டத்தை தடுக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் முக்கிய குற்றவாளி இல்லை என தெரிவித்துள்ள அந்த மருத்துவரின் பெற்றோர், மருத்துவமனையை சேர்ந்தவர்கள் தகவல் கொடுக்காமல் தனது மகள் தனியாக இருப்பது சஞ்சய் ராய்க்கு எப்படி தெரிந்தது என கேள்வி எழுப்பியுள்ளனர். மருத்துவமனையில் சட்ட விரோதமான செயலை கொலை செய்யப்பட்ட தனது மகள் அறிந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதனை அவர் வெளியுலகுக்கு சொல்லி விடுவார் என்பதால் அவரை உயர் பதவியில் இருப்பவர்கள் திட்டமிட்ட கொலை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பெற்றோர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.







