திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 60-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது.
கோடைக்காலம் தொடங்கியது முதல் மக்கள் சுற்றுலா தளங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். அந்தவகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களில் சிறப்பு மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் ஊட்டி, ஏற்காட்டை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 60-வது மலர் கண்காட்சி இன்று (மே 26-ம் தேதி) தொடங்குகிறது.
தோட்டக்கலைத் துறை மூலம் நடத்தப்படும் இந்த மலர்கண்காட்சி இன்று தொடங்கி ஜூன் 2-ம் தேதி வரை 8 நாட்கள் நடக்க உள்ளது. இதற்காக, ஒரு லட்சம் மலர்ச் செடிகள் ஏற்கனவே நடவு செய்யப்பட்டுள்ளன. பல வண்ணங்ளில் பூத்துக் குலுங்கும் சால்வியா, டல்ஹினியம், மேரிகோல்ட் , ரோஜா செடிகள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் 40க்கும் மேற்பட்ட அரங்குகளில் 35 வகையான மலர்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மலர்களால் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ள ஒட்டகச்சிவிங்கி, கரடி, வாத்து உள்ளிட்ட வடிவமைப்புகளும், காய்கறிகளால் அமைக்கப்பட்டுள்ள காட்டெருமை, வரிக்குதிரை உள்ளிட்ட உருவங்கள் இந்த ஆண்டின் சிறப்பு அம்சங்களாக பார்க்கப்படுகிறது.
அத்துடன் கோடை விழாவில் சுற்றுலாத்துறை மூலமாக மங்கள இசை, பரதம், தப்பாட்டம், ஒயிலாட்டம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், மே 28-ம் தேதி பட்டிமன்றமும், மே 30-ம் தேதி படகு போட்டியும், மே 31-ம் தேதி கால்நடைத்துறை மூலம் நாய்கள் கண்காட்சியும், ஜூன் 1-ம் தேதி படகு அலங்கார போட்டியும் நடைபெறவுள்ளது. மேலும் கலைப் பண்பாட்டுத்துறை மூலம் தினமும் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply