சிறுவாணியில் தண்ணீரை வெளியேற்றும் கேரள அரசு
கேரளா அரசு அணை மதகை திறந்துவிட்டு தண்ணீர் வெளியேற்றுவதால் சிறுவாணி நீர் மட்டம் நேற்று, 40 அடியாக சரிந்தது.கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணை, கேரளா எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த அணையில், 50 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்க முடியும். ஆனால், கேரளா அரசு அதிகபட்சம், 45 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வருகிறது. அதற்கு மேல் வரும் தண்ணீரை மதகை திறந்து விட்டு ஆற்றில் வெளியேற்றுகிறது. நேற்று முன்தினம் அணையில், 43 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்தது. சிறுவாணி அடிவாரப் பகுதியில், 19 மி.மீ., அணைப்பகுதியில், 40 மி.மீ., மழை நேற்று பதிவாகியுள்ளது.
இதனால் அணை நிரம்பும் வாய்ப்புள்ளதாகவும், இந்தாண்டு முழுவதும் குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் எண்ணியிருந்தனர்.ஆனால், கேரளா பொதுப்பணித்துறையினர், அணை மதகை, 50 செ.மீ., உயர்த்தி தண்ணீரை ஆற்றில் வெளியேற்ற தொடங்கி விட்டனர்.
இதனால், நேற்று அணை நீர் மட்டம், 40 அடியாக சரிந்துவிட்டது. கேரளா அதிகாரிகளின் செயல், கனமழை பெய்தும் பயனில்லை என்ற நிலையை ஏற்படுத்தி விட்டது.தமிழக தரப்பில் சிறுவாணி அணையில் இருந்து தினமும், 10 கோடியே, 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பது வழக்கம். மத்வராயபுரத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பராமரிப்பு நடந்த காரணத்தால் நேற்று, 3 கோடியே, 10 லட்சம் லிட்டர் மட்டுமே தண்ணீர் எடுக்கப்பட்டது. ‘குழாய் சீரமைப்பு பணி நேற்று நிறைவடைந்து விட்டது. இன்று முதல் முழு அளவில் தண்ணீர் எடுக்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply