கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
இந்த துயரச் சம்பவம் குறித்த அரசியல் கட்சித் தலைவர்களின் பார்வை இது…
கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதல்வர் உதயநிதி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ‘கரூரில் இதுபோன்ற மிக, மிக துயரமான சம்பவம் நடந்திருக்கக் கூடாது. அரசு சார்பில் முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தும் கோர விபத்து நடந்துவிட்டது.
செய்தி அறிந்தவுடன் முதல்வர் இரவோடு, இரவாக கரூருக்கு வந்து துயர்துடைப்பு பணிகளை துரிதப்படுத்தினார். இந்த சம்பவத்தை முதல்வரால் தாங்க முடியவில்லை. மிகுந்த சோகத்தில் என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். குடும்பத்துடன் வெளிநாடு ஓய்வுக்கு சென்றிருந்த நான் உடனடியாக திரும்பிவிட்டேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எவ்வளவு ஆறுதல் கூறினாலும், இழப்பை ஈடு செய்ய முடியாது. இதற்கு மேல் இழப்பு இருக்கக்கூடாது என எண்ணுகிறோம்.
இனி இதுபோன்ற விபத்து நடக்கக்கூடாது. அதற்கு அரசு முழு நடவடிக்கை எடுக்கும். ஆணையம் அளிக்கும் அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவத்தில் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. காவல் துறை தெரிவித்த வேண்டுகோளை ஏற்றிருக்க வேண்டும். அதை தொண்டர்கள் ஏற்காவிட்டால் கட்சியின் 2-ம் கட்ட தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
இனி இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இதை மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவரும் துணை நிற்கவேண்டும். விஜய் வாரா வாரம் வருகிறார். உங்களை எல்லாம் பார்க்கிறார். தயவுசெய்து அவரிடமும் சில கேள்விகளை கேளுங்கள்’ என்று அவர் கூறினார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ‘தவெக பிரச்சார கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் சற்று நேரத்தில் மின் விளக்குகள் அணைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு விஜய் நடத்திய 4 பிரச்சார கூட்டங்களிலும் நிலைமை எப்படி இருந்தது என்பதை ஆய்வு செய்து காவல்துறை பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும்.
இச்சம்பவத்தை பொறுத்தவரை பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது தெரிகிறது. ஆளும்கட்சி கூட்டம் நடத்தினால் ஆயிரக்கணக்கான போலீஸாரைக் கொண்டு பாதுகாப்பு அளிக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை அரசு ஒருதலைபட்சமாக நடத்துகிறது. திமுக ஆட்சியில் கூட்டம் நடத்துவதற்கே நீதிமன்றம் செல்லும் நிலை உள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டாலும் காவல்துறை முழுமையான பாதுகாப்பு அளிப்பதில்லை. காவல்துறை முழுமையான பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
அவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். குறித்த நேரத்தில் கட்சியினரும் கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என இருக்கக் கூடாது. ஆளும் அரசு கடமை தவறியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது. விஜய் பேசத் தொடங்கிய உடன் ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து வந்தது எப்படி? இதை விஜய் பேசும்போதே குறிப்பிட்டார். அவர் பேசும்போது ஆம்புலன்ஸ் வந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தங்களுடைய பொறுப்பை தட்டி கழிப்பதற்காக அதிக கூட்டம் வந்ததாக காவல்துறை சொல்கிறது. அனுபவம் உள்ள பெரிய கட்சிகள் கட்டமைப்புடன் அசம்பாவிதம் ஏற்படாமல் கூட்டத்தை நடத்தி விடுகின்றனர். இந்த விவகாரத்தில் உடனே நடவடிக்கை எடுத்து முதல்வர் அவரது கடமையை செய்திருக்கிறார். ஒருநபர் ஆணையம் குறித்து முன்கூட்டியே கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது’ என்று அவர் கூறினார்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியது: கரூர் சம்பவம் குறித்து தகவலறிந்த முதல்வர் உடனடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததுடன், விரைந்து நேரில் வந்து நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். இது கருப்பு தினமாக அனைவரின் மனதில் இருந்து நீங்காது.
போதிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது. கட்சி நிகழ்ச்சி என்றால் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஆகியவை கட்சி நிர்வாகத்தின் பொறுப்பு. பொதுவாகவே விதிக்கப்படும் நிபந்தனைகளை கடைபிடித்தால்தான் அனைவரும் பத்திரமாக வீடு திரும்பமுடியும்.
இந்த சம்பவத்தில் சதி செய்ய வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. இதில் அரசியல் பேச விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் யார் பொறுப்பேற்பது என்கிற எண்ணம் இல்லை என்றார். பின்னர், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இளைஞர் கிஷோரின் குடும்பத்துக்கு தமிழக அரசின் நிவாரணம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
யாரையும் குறை சொல்லி பயனில்லை. இனி இதுபோன்ற பேரிடர் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சீமானை உள்ளே அனுமதிக்காமல் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து போலீஸார் உறவினர்களை சமாதானம் செய்து சீமானை அஞ்சலி செலுத்த அனுமதித்தனர். அதன்பின், காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறிய பின், செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: எதிர்பாராதவிதமாக நடந்த வேதனையை உண்டாக்கும் மோசமான சம்பவம்.
யாரையும் குறை சொல்லி பயனில்லை. இனி பேரிடர் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை படிப்பினையாக எடுத்துக்கொண்டு வருங்காலங்களில் தவறு நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அதை கடந்து வரவேண்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றார்.
திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியது: கரூரில் பெரும் துயரம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.
அந்தத் தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். சம்பவம் நடந்த இடத்துக்கு முதல்வர் உடனடியாக நள்ளிரவில் சென்றது அனைவருக்கும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் திரை கவர்ச்சி என்பது ஒரு மோகமாக மாறி உள்ளது. கரூரில் அரசியல் தலைவரை காண்பதற்கு வந்த கூட்டம் அல்ல. ஒரு திரை கதாநாயகனை காண்பதற்கான கூட்டமாகும். இந்த சம்பவத்துக்கு காவல்துறை மீதோ, தமிழக அரசு மீதோ, நடத்தியவர்கள் மீதோ குற்றம் சுமத்துவது தேவையில்லை.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு செல்ல திட்டமிட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக செல்லலாம். ஆனால், 7 மணி நேரம் தாமதமாவது என்பது திட்டமிட்டு போகிறார்களா என்று கேள்விக்குறியாகிறது என்றார். ”கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புக்கு செல்லாத முதல்வர் ஸ்டாலின், கரூருக்கு உடனடியாக சென்றது ஏன்?” என கேட்டபோது, ”அந்தக் கால சூழல் வேறு, இந்தக் கால சூழல் வேறு” என்றார்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து உரிய தீர்வு காண வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர், நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவம் குறித்து உயர் நீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றார்.
தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 40 பேர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் மொத்தம் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 40 பேர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் மொத்தம் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றார். அப்போது எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கரூரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவாக செய்திருக்க வேண்டும். சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்புகளை முறைப்படுத்தி இருக்க வேண்டும் என்றார்.
ஜி.கே.வாசன் கூறியது: இச்சம்பவத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு தீர்வு காணவேண்டும். அரசியல் செய்யவேண்டிய நேரமில்லை. துயரமான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆளுங்கட்சி கூட்டங்கள் என்றால் அதிகப்படியான பாதுகாப்பு வழங்குபவர்கள்.
ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதில்லை. இதுபோன்ற துயர சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதிப்பு இல்லாத வகையில் பொதுக்கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
கரூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியது: இந்த துயர சம்பவத்துக்கு அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். கூட்டம் நடத்த குறுகலான சாலையை வழங்கியுள்ளனர். உள்நோக்கத்துடன் வழங்கப்பட்டதா என தெரியவில்லை. குறுகலான இடம், காலதாமதம், மின்தடை, போலீஸ் தடியடி, ஆம்புலன்ஸ் வருகை போன்றவற்றால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது.
எனவே, தவெக இதைஉணர்ந்து, உங்களை நம்பி வரும் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு அளிக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு போலீஸார் பாதுகாப்பு அளிப்பதில்லை. தவெகவினர் ரோடு ஷோ போல நடத்தாமல் மாநாடு போல ஏற்பாடு செய்து நடத்தவேண்டும். இந்த துயர சம்பவத்துக்கு தவெக தவறு, அரசு கவனக்குறைவு ஆகியவையே காரணம் என்றார்.
கரூரில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியது: கூட்டத்தை முறையாக கையாளவில்லை. கூட்ட கட்டுப்பாடு மேலாண்மை தமிழகத்தில் இல்லை. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் காவல் துறை அனுமதி கொடுத்திருக்கக் கூடாது. எஸ்.பி. மற்றும் ஆட்சியரை சஸ்பெண்ட் செய்யவேண்டும்.
100 போலீஸார் கூட இல்லை. சனிக்கிழமை மட்டும் பரப்புரை செய்வதை விஜய் கைவிடவேண்டும். வார இறுதியில் பிரச்சாரம் மேற்கொண்டால் குழந்தைகள் வரத்தான் செய்வார்கள். பாஜக சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
திருச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது: அரசு இன்னும் கவனத்துடன் இந்த நிகழ்வை கையாண்டிருக்க வேண்டும். தேர்தல் நெருங்க நெருங்க நிறைய கூட்டங்கள் நடைபெறும். அரசு இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த விஷயத்தை பொறுத்தவரை முறையான விசாரணை நடத்த வேண்டும்.
வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். எவ்வளவு கூட்டம் வந்தாலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. நான் இவ்வளவுதான் எதிர்பார்த்தேன். அதிகமாக வந்து விட்டார்கள். அதனால் உயிரிழப்பு ஏற்பட்டது எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்றார்.
கரூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியது: கரூரில் நடந்த சம்பவத்தை ஒரு பாடமாக கருதி இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சிகளின் மாநாடு, பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு உரிய அனுமதி வழங்குவதில்லை. காவல் துறை பொறுப்புடன் செயல்படவேண்டும். அரசு இந்த சம்பவத்தில் சரியாகத் தான் செயல்பட்டுள்ளது என்றார்.