கரூர் சம்பவம்… சிபிஐ விசாரணைக்கு மாற்றம்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் தொடர்ந்து விசாரணையும் மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே 41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக உள்ளிட்ட தரப்புகள் சார்பில் 5 மனுக்கள் தொடரப்பட்டுள்ளது.

இந்த 5 மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, என்.வி அஞ்சாரியா அமர்வு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.. அப்போது தவெக தரப்பு மாநில அரசின் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் விஜய்யின் தலைமைப்பண்பு குறித்து விமர்சித்து குறித்தும் தவெக தரப்பு வாதிட்டது.. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர்.. தேர்தல் பரப்புரைக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கோரிய வழக்கு எப்படி கிரிமினல் வழக்காக மாற்றப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்..

அதே போல் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினர் தொடர்ந்த சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.. ஆனால் அனைத்து வழக்குகளையும் சிபிஐ மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அரிய வழக்குகளை மட்டுமே மாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பு வாதிட்டது.

கரூர் சம்பவம் தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும் என்று தமிழக அரசு அனுமதி கோரியது.. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்கினர்.. அனைத்து மனுக்கள் மற்றும் பிரமாண பத்திரத்தை பார்த்த பிறகு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்..

இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக தவெக, பாஜக வழக்கறிஞர், பலியானவர்களின் உறவுகள் தாக்கல் செய்த 5 மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. அதன்படி கரூர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 2 ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இது இடைக்கால உத்தரவு மட்டுமே என்பதை தெளிவுப்படுத்திய உச்சநீதிமன்றம், தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்யும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.. சென்னை உயர்நீதிமன்றம் எப்படி சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உத்தரவிட்டது என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.