ஆட்சியரிடம் CBI 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை!

கரூர் சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ள சுற்றுலா மாளிகையில்,  கரூர் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் ஐந்து பேர் சிபிஐ முன் ஆஜராகினர்.
கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி,, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது .

கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் வேலுச்சாமிபுரம் பகுதி பொதுமக்கள், வணிகர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்,உரிமையாளர்கள்,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் என பல்வேறு கட்டமாக சம்மன் வழங்கப்பட்டு அவர்களிடம் விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் கரூருக்கு வருகை தந்த உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழுவினர், பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.

மேலும் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமி புரம் இடத்தையும் நேரில் பார்வையிட்டு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பிரச்சாரக் கூட்டத்திற்கு தேர்வு செய்த லைட் ஹவுஸ் கார்னர், பேருந்து நிலையம் ரவுண்டானா, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டனர்.நேற்று உயிரிழந்தவர்களை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அரங்கில் உடற்கூறு ஆய்வு செய்த அரசு மருத்துவர்கள் ஐந்து பேருக்கு சம்மன் வழங்கி, ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், இன்று மேலும் ஐந்து அரசு மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், இன்று காலை சிபிஐ விளக்கம் அளிக்க வந்தவர்,  இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில் பின்னர் கிளம்பிச் சென்றார்.