கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடத்தப்பட்டு 5-30 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. அதை தொடர்ந்து பால், பன்னீர் ,சந்தனம், ஜவ்வாது உட்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 6 மணிக்கு பூஜை 7 மணிக்கு விநாயகர் பூஜை யாகம் இறை அனுமதி பெறுதல் மண் எடுத்தல், முளைப்பாளிகை இடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் கருவறையை அடுத்த மகா மண்டபத்தில் சுப்பிரமணியசாமி எழுந்தருளினார். காலை 9 மணிக்கு சுப்ரமணியசாமிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது .அதன் பிறகு இடும்பன் சுவாமி, வீரபாகு மற்றும் இதர தெய்வங்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி யாகசாலை பூஜை நடைபெற்றது . இதைத் தொடர்ந்து கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் சிவாச்சாரியார்களிடம் காப்பு கட்டிக்கொண்டு விரதத்தை தொடங்கினர் மதியம் 12 மணிக்கு சுப்ரமணியசுவாமிக்கு உச்சிக்கால சிறப்பு பூஜை அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது. கந்தசஷ்டியை பொட்டி வருகிற 28ஆம் தேதி வரை தினமும் காலை – மாலையில் சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்,யாக பூஜை நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 27-ந் தேதி மதியம் 3 மணிக்கு நடக்கிறது. 28-ந் தேதி சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.இதே போல கோவை காந்தி பார்க் சுக்ரவார்பேட்டையில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று காப்பு கட்டிக்கொண்டனர்.பின்னர் விரதத்தை தொடங்கினர்.இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன், உறுப்பினர்கள் மகேஸ்வரன், ராஜா, விஜயலட்சுமி மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்.!!
