இந்திய பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றிருந்தார். அங்கு டோக்கியோவில் நடந்த பொருளாதார மன்றத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தியா-ஜப்பான் இடையிலான 15-வது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. ஜப்பானில் உள்ள சுமார் 16 மாகாணங்களின் கவர்னர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடி, அங்கிருந்து சீனா புறப்பட்டுச் சென்றார். சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டிற்கு இடையே ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பில் சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஒருவரோடு ஒருவர் சிரித்துப் பேசி கலந்துரையாடியதை காண முடிந்தது.
இந்த மாநாடு நிறைவடைந்ததும் ரஷிய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் ஒரே காரில் பயணம் செய்தனர். மாநாட்டில் மோடி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக இருந்த நாடுகள் குறித்தும் பேசினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் முன்னிலையிலேயே பிரதமர் மோடி இந்த கருத்துகளை முன்வைத்தார்.
சமீபத்தில் இந்தியா, சீனா மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வரிவிதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியதாக ட்ரம்ப் அறிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று ரஷியா, இந்தியா மற்றும் சீனாவின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியவத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உக்ரைன் மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.