இணையத்தில் கசிந்தது ஜனநாயகன்

விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் உள்ள நிலையில் இன்று 5.31 நிமிட காட்சிகள் சமூக வலைதளங்களில் லீக்காகி பரவி வருகிறது.இதனால் விஜய் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் இறங்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்க உள்ளது. விஜய் 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தான் தீவிர அரசியலுக்காக அவர் தனது சினிமாவை கைவிடுவதாக அறிவித்து இருந்தார். அதன்படி அவரது கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 9ம் தேதி தியேட்டரில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ‘சென்சார்’ சான்று கிடைக்காததால் தேதி குறிப்பிடாமல் திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன்’ திரைப்படத்தில் அரசியல் வசனங்கள் உள்ளதோடு, சில முக்கிய குறியீடுகள் உள்ளன. இதனால் அந்த திரைப்படத்துக்கான சென்சார் சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் இந்த திரைப்படம் மறு தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மறு தணிக்கை குழு திரைப்படத்தை பார்த்துள்ளதாக கூறப்படும் நிலையில் இன்னும் சென்சார் சான்று கிடைக்கவில்லை. இதனால் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. வெளியாகும் தேதியும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.இப்படியான சூழலில் தான் இன்று சமூக வலைதளங்களில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சில முக்கிய காட்சிகள் லீக்காகி உள்ளது. சுமார் 5.31 நிமிடங்கள் வரையிலான காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. படத்தில் மதுரை சிறைச்சாலையை மையப்படுத்தி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளும், விஜய் சண்டையிடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை ‘TVK’ டாட்டூ கையில் இடம்பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டது யார்? என்பது தெரியவில்லை. தற்போது இந்த வீடியோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் விஜய் மட்டுமின்றி படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.