தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அன்னூரில், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா அழைப்பிதழில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்கள் இல்லையென்ற குற்றச்சாட்டை முன் வைத்து, செங்கோட்டையன் அந்த விழாவைப் புறக்கணித்தார்.
அதைத் தொடர்ந்து, நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடாமல் செங்கோட்டையன் பேசியும் வந்தார். இதனால், செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி ஒன்றிணைப்பு குறித்து குரலெழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இதனையடுத்து, செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, தில்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, தில்லிக்குச் சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செங்கோட்டையன் அமைதி காத்து வந்தார்.
இந்நிலையில், மனம் திறந்து பேசப் போவதாக அறிவித்த செங்கோட்டையன், கடந்த செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளவில்லை என்றால், ஒருங்கிணைக்கும் பணிகளை நான் மேற்கொள்வேன். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன். யாரை இணைக்க வேண்டும் என்பதை பொதுச் செயலாளர் முடிவு செய்துகொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.
செங்கோட்டையனின் இந்தக் கருத்துக்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து செங்கோட்டையன், அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட 13 பேரை பொறுப்புகளில் இருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தனது அறிவிப்புக்குப் பின், கட்சி அளவிலும் தனக்கு ஆதரவு வரும் என்று முதலில் செங்கோட்டையன் எதிர்பார்த்தார். ஆனால், அவரது ஈரோடு மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட அந்தியூர், பவானிசாகர் தொகுதியில் இருந்து ஒருவர் கூட அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. குறிப்பாக, செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரான பவானிசாகர் எம்எல்ஏ பன்னாரி, செங்கோட்டையனின் செய்தியாளர்கள் சந்திப்புக்குக் கூட வரவில்லை.
எடப்பாடி பழனிசாமி சமாதானத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்குச் செல்வார் என்றுவிட்டதால், முன்னாள் அமைச்சர்கள் சிலரும் ஒதுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கோபிசெட்டிபாளையத்தைத் தவிர்த்து கொங்கு மண்டலத்தில் இருந்து எந்த ஒரு முக்கிய நிர்வாகிகளும் செங்கோட்டையனை சந்திக்க வரவில்லையாம். கட்சியை ஒருங்கிணைக்கலாம் என்றால் தன்னை விட்டுவிட்டு மற்றவர்களெல்லாம் ஒன்றிணைந்து வருகிறார்கள் என்ற கலக்கமும் செங்கோட்டையனிடம் தெரிய தொடங்கி விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், விரைவில் நல்லது நடக்கும். அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை. ஊடகங்கள்தான் அதனை தவறாக புரிந்து கொண்டது. 10 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும், ஒன்றரை மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் தெரிவித்தேன் என கோபி செட்டிபாளையத்தில் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம், ராணுவ கட்டுப்பாட்டோடு இருந்த கட்சி சிதைந்து விட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “அது உங்கள் கருத்து” என பதில் அளித்தவர், பொறுத்திருந்து பாருங்கள் எனவும் தெரிவித்தார்.





