மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க காரணமே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள்தான் என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
1991-ல் சோவியத் ஒன்றியம் என்கிற ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளின் கூட்டமைப்பு சிதறிப் போனது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் உள்ளிட்டவை சுதந்திர நாடுகளாகின.
உலக அரசியல் வரலாறானது அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் என்ற இரண்டு அச்சுகளை மையமாக கொண்டு இயங்கி வந்தது. 1991-ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் உலக அரசியல் ஒழுங்கு என்பது மாறத் தொடங்கியது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தாரளமயமாக்கல் எனும் புதிய பொருளாதார கொள்கைகள் நுழைந்தன. இதனால் ஒட்டுமொத்தமாக சர்வதேச அரசியல் தலைகீழானது. தற்போதைய நிலையில் அமெரிக்கா அதன் சார்பு நாடுகள், ரஷ்யா அதன் சார்பு நாடுகள், சீனா அதன் சார்பு நாடுகள், வடகொரியா என சர்வதேசம் தனித்தனி துருவங்களாக திணறிக் கொண்டிருக்கின்றன.
இதில் வலிமையாக இருப்பதுதான் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பும் அதன் ராணுவ அமைப்பான நேட்டோ படைகளும். நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் நாடுகளின் கூட்டமைப்பாகும். இதில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 12 நாடுகள் இடம்பெற்றுள்ளன. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் தன்னிச்சையான ராணுவ தலையீடுகளை மேற்கொண்டவைதான் இந்த நேட்டோ படைகள். கடைசியாக ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாமல் பல்லாயிரம் வீரர்களை பலி கொடுத்துவிட்டு நேட்டோ படைகள் வெளியேறின. நேட்டோ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அல்லது நேட்டோவுடன் அனுசரணையாக நடந்து கொள்கிற நாடுகள் மீது பிறநாடுகள் தாக்குதல் நடத்தினால் 12 நாடுகளின் ராணுவம் கூட்டாக களமிறங்கும் என்பது அதன் கொள்கை.
சரி இதில் எங்கே உக்ரைன், ரஷ்யா வருகிறது? சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்த காலத்தில் 1990களில் கிழக்கு ஐரோப்பாவில் கால்பதிக்க மாட்டோம் என்பது நேட்டோ அமைப்பின் வாக்குறுதி. ஆனால் 1997-க்குப் பின்னர் ரஷ்யாவின் அண்டை நாடுகள் பெரும்பாலானவற்றை நேட்டோ தமது கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டது. எஸ்தோனியா, லாத்வியா, லிதுனியா, போலந்த், செக் குடியரசுகள், ஸ்லோவேகியா, ஹங்கேரி, ருமேனியா, ஸ்லோவேனியா, குரோசியா, மான்டிநீக்ரோ, அல்பேனியா, வடக்கு மாசிடோனியா, பல்கேரியா என ரஷ்ய பிராந்தியத்தில் இருந்த பல நாடுகள் நேட்டோவில் இணைந்துவிட்டன. இந்த வரிசையில்தான் உக்ரேனும் நேட்டோ கூட்டமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. எந்த நேரத்திலும் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் உறுப்பு நாடாகும் என்கிற சாத்தியம் இருந்தது. இதனால் அண்டை நாடாக உக்ரைன் மீது ரஷ்யாவுக்கு கடும் கோபம் இருந்து வருகிறது.
அத்துடன் 2014-ல் யுக்ரேனில் ஒரு அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. அப்போது ரஷ்யா ஆதரவு அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இது ரஷ்யாவை மேலும் ஆத்திரமூட்டியது. இதனால் கிழக்கு உக்ரைன் பகுதியான கிரீமியாவை ரஷ்யா ஆக்கிரமித்தது. அப்போது நேட்டோ படைகள் கடும் அமைதி காத்தன. இதற்கு ரஷ்யா சொன்ன காரணமும் மிக முக்கியமானவை. அதாவது உக்ரைனில் ரஷ்யாவை பூர்வீகமாக கொண்டவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தனர் என்கிற ஒரு சாக்கை சொல்லித்தான் கிரீமியாவை ரஷ்யா ஆக்கிரமித்துக் கொண்டது. கிரீமியா கிளர்ச்சியைப் போல் ரஷ்யாவை பூர்வீமாகக் கொண்டவர்கள் உக்ரைனின் டொனெட்ஸ்க், லூஹான்ஸ் ஆகிய ரஷ்யா எல்லைப் பகுதிகளில் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிராந்தியங்களை ஏற்கனவே கிளர்ச்சியாளர்கள் சுதந்திரம் பெற்ற பகுதிகளாகவும் அறிவித்திருந்தனர். இப்போது உக்ரைன் மீது உக்கிர யுத்தம் நடத்தும் ரஷ்யா, டொனெட்ஸ்க், லூஹான்ஸ் கிளர்ச்சியாளர்களுக்கு உதவியாக ராணுவத்தை அனுப்பி இருக்கிறோம் என்கிறது. அதேநேரத்தில் பெலாரஸ் வழியாக உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கியும் ரஷ்யா படைகள் முன்னேறி இருக்கின்றன.
ஆனால் இம்முறை உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் போர்க்களத்துக்கு வர அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எஸ்தோனியா, லிதுவேனியா, போலந்து, லாத்வியா நாடுகளில் நேட்டோ படைகள் நிலை கொண்டிருக்கின்றன. அதாவது ரஷ்யாவை சூழ்ந்து நேட்டோ படைகள் நிற்கின்றன. இதனை கொஞ்சமும் ரஷ்யா சகித்து கொள்ளவில்லை. நேட்டோ படைகள் தமது பிராந்தியத்தை விட்டு வெளியேற வேண்டும் என விரும்புகிறது ரஷ்யா. நேட்டோ படைகளுடனான முட்டல் மோதல்களின் ஒருபகுதியாகவும் இப்போது தமது படை வலிமையை காட்ட உக்ரைனை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது ரஷ்யா. உக்ரைனுக்கு ஏற்கனவே நேட்டோ படைகள் ஏராளமான ராணுவ உதவிகளை கொடுத்திருக்கிறது. நேட்டோவின் ராணுவ உதவி கொண்டே ரஷ்யாவை உக்ரைன் எதிர்க்கிறது. இந்த பின்னணியில்தான் உக்ரைனின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குகிறோம் என்கிறது ரஷ்யா. உக்ரைனுக்குள் உள்நுழைந்துவிட்டது ரஷ்யா. அத்தனை படைகளையும் தயார்நிலையில் வைத்திருக்கிறது நேட்டோ படைகள். உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் போர்க்களத்தில் இறங்கிவிட்டால் மூன்றாவது உலக யுத்தம் எனும் சரித்திரம் நிகழ்ந்துவிடும்.
Leave a Reply