கோட்டூர் அருகே சிறுத்தை நடமாட்டம் உண்மையா..? வனத்துறையினர் விசாரணை.!!

ஆனைமலை: ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (55). கோட்டூர் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று காலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மரத்தின்மீது சிறுத்தை ஒன்று இருப்பதை கண்டு பீதியடைந்துள்ளார். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் தோட்டத்து உரிமையாளர் கோட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார், வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். ஆனால், சிறுத்தை நடமாட்டம், அதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை என தெரியவந்தது. இருப்பினும், வனத்துறை ஊழியர்கள் கோட்டூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.