மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமா..? சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரவுகிறது. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்த பின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆதார் இணைப்பு சமூக நலத் திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதாகவும் எனவே மின் கட்டண மானியம் பெற ஆதாரை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, வாடகைதாரர்கள் மானியம் பெறும் விவகாரமானது உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்னை. மீட்டர் அடிப்படையில்தான் ஆதார் இணைக்கப்படும் என்றார். மேலும் அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பிறகே ஆதார் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்க உள்ளனர்.