பாக்தாத்: ஈரான் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஈராக் முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இன்று ஈராக்கில் மின்சாரம் முழுவதும் தடைபட்டது. இதனால் நாடு முழுவதும் மின்சார அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார அமைச்சகம் இதனை உறுதி செய்திருக்கிறது. அனைத்து மாகாணங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், காரணத்தைக் கண்டறிய தொழில்நுட்பக் குழுக்கள் பணிபுரிந்து வருவதாகவும் அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அமெரிக்க தூதரகம், பக்தாதில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அல் ஜசீரா செய்தி நிறுவனம், இந்த சைரன்கள் தலைநகரில் உள்ள தூதரக வளாகத்திற்குள் ஒலித்ததாகக் கூறியிருக்கிறது. குர்திஷ் ஒளிபரப்பு நிறுவனமான ருடாவிற்கு, ஈராக் அமைச்சக செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில், மின் விநியோக அமைப்பு முழுமையாக செயலிழந்துவிட்டது என்று கூறினார். இந்த மின் தடையின் பின்னணி உடனடியாகத் தெரியவில்லை. எத்தனை காலம் இந்த மின் தடை நீடிக்கும் என்பது பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மின்சார தடை காரணமாக ஏற்படும் விளைவுகள் குறித்து அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கின்றனர். இதன் மூலம் நிலைமை விரைவில் சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பக் குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன என அரசு தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஈராக் உள்ளிட்ட மற்ற அனைத்து வளைகுடா நாடுகளும், அமெரிக்கவுக்கு ஆதரவாக இருக்கின்றன. அமெரிக்க படைகளை தங்கள் மண்ணிலிருந்து செயல்பட அனுமதித்துள்ளன. எனவே, இந்த நாடுகள் மீதும் ஈரான் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக சர்வதேச எண்ணெய் கிணறுகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதனால் வளைகுடா நாடுகளின் வருவாய் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது போர் நிறுத்தத்திற்கான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தாக்குதலால் கத்தாரில் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கான எல்பிஜி வாயு விநியோகம் 40% சரிவடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






