துபாயில் பெரும் பணக்காரர்கள் பகுதியை குறி வைத்து தாக்கிய ஈரான் டிரோன்கள்..

துபாய்: அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே வெடித்த மோதல் இப்போது பிராந்திய மோதலாக மாறும் அபாயத்தில் இருக்கிறது.

வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே துபாயில் பெரும் பணக்காரர்கள் வாழும் பகுதியைக் குறிவைத்து ஈரான் இப்போது தாக்குதலை நடத்தியுள்ளது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரானை மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன. தாக்குதலின் முதல் நாளே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இருந்தபோதிலும் மோதல் முடிவுக்கு வரவில்லை. தனது தலைமையைக் கொன்றதால் ஆத்திரமடைந்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள், ராணுவ முகாம்களைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கிடையே இன்று துபாயைக் குறிவைத்தும் ஈரான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று வியாழக்கிழமை துபாய் நகரின் மையப்பகுதியில் டிரான் தாக்குதல் நடந்துள்ளது. துபாயில் சூப்பர் ரிச் எனப்படும் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் டவுன் டவுன் (Downtown) பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது துபாயில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், இதனைத் துபாய் அதிகாரிகள் “சிறிய ட்ரோன் சம்பவம்” என்றே குறிப்பிடுகிறார்கள். திடீரென ஏதோ ஒரு டிரோன் வந்து தாக்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள் டவுன் டவுன் பகுதியில் தாக்குதல் நடந்துள்ளதைத் துபாய் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. அது மேலும், “அல் பதா பகுதியில் நடந்த இந்த சிறு ட்ரோன் சம்பவத்திற்குப் பிறகு துபாய் அதிகாரிகள் சீரமைப்பு பணிகளில் இறங்கியுள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதில் யாருக்கும் எந்தவொரு காயம் எதுவும் ஏற்படவில்லை” என்றனர். இருப்பினும், டிரோன் வந்து விழுந்ததால் அல் பதா குடியிருப்புப் பகுதியில் எழுந்த சிறிய புகை மேகங்கள் சற்று நேரத்தில் மறைந்தன என அங்கிருந்த சர்வதேச ஊடகத்தினர் தகவல் தெரிவித்தனர். மத்திய கிழக்குப் போர் பிப்ரவரி 28 அன்று தொடங்கியதிலிருந்து, மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்கவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா பகுதி முழுக்க ஈரான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை ஏழு அமெரிக்க வீரர்கள், 11 பொதுமக்கள் உட்பட மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று முன்னதாக, துபாய் கடற்கரை அருகே பாரசீக வளைகுடாவில் ஒரு சரக்குக் கப்பல் திடீரென தாக்கப்பட்டது. கப்பலில் கூட சிறிய அளவு தீ ஏற்பட்டது. உடனடியாக கப்பலில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த தகவலை பிரிட்டன் ராணுவத்தின் யு.கே. மாரிடைம் டிரேட் ஆபரேஷன்ஸ் சென்டர் உறுதி செய்தது. அதேபோல பஹ்ரைனில், ஈரான் தாக்குதலால் முஹர்ராக் தீவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இங்கு தான் அந்த நாட்டின் சர்வதேச விமான நிலையம், ஜெட்புயல் மற்றும் எண்ணெய் கிணறுகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..