கமிஷன் கேட்டு மிரட்டல்…? வெளியான ஆடியோ – திமுக மாநகராட்சி மேயர் கணவர் விளக்கம்.!

கோவை மாவட்டம், மணியக்காரன்பாளையம் பகுதியில் கோவிலுக்கு அருகே வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கடை போடுபவர்களிடம் தனி நபர் ஒருவர் கோவில் கமிட்டியிடம் அனுமதி பெற்று கட்டணம் வசூல் செய்து வருவதாக தெரியப்படுகிறது.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார், அடுத்த வாரத்தில் இருந்து சந்தை கடையில் நம்ம ஆட்கள் வசூல் செய்துகொள்வார்கள். நீங்கள் வசூல் செய்ய வேண்டாம் என்று செல்போனில் கூறுவது போல் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இது குறித்து மேயரின் கணவர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளதாவது,

“மணியக்காரன்பாளையத்தில் கோவிலுக்கு அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான குட்டை பகுதியில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிலர் அதனை கோவில் இடம் என்று கூறி சந்தை கடைகளில் பணம் வசூல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இதனால், அந்த பகுதியை சேர்ந்தவன் என்ற முறையில் நான் விசாரித்த போது கோவில்காரர்கள் வசூலிக்கவில்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக நேரில் தான் பேசினோம். செல்போனில் பேசவில்லை. நான் பேசாததை பேசியதாக கூறி ஆடியோவை பரப்பி வருகிறார்கள். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்”. என்று அவர் தெரிவித்துள்ளார்.