பிரதமர் மோடியின் சீன பயணத்தால் புத்துயிர் பெற்ற இந்திய பங்குச்சந்தை..!

பிரதமர் மோடியின் சீன பயணமும், அங்கு சீன அதிபர், ரஷ்ய அதிபர் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் மேற்கொண்ட சந்திப்புகள் மற்றும் ஒப்பந்தங்களும் இந்திய பங்குச்சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனால், இன்று காலை பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 365 புள்ளிகள் உயர்ந்து, 80,183 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 114 புள்ளிகள் உயர்ந்து 24,540 என்ற புள்ளிகளை எட்டியது.

இன்றைய வர்த்தகத்தில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், சிப்லா, எச்.சி.எல். டெக், ஹீரோ மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டி.சி.எஸ். உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.

மாருதி, ஜியோ ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், பாரதி ஏர்டெல் மற்றும் சன்ஃபார்மா உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.

பிரதமரின் ராஜதந்திர நடவடிக்கைகள், சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதுடன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சாதகமான சூழலை உருவாக்கும் என முதலீட்டாளர்கள் நம்புவதையே இந்த பங்குச்சந்தை ஏற்றம் காட்டுகிறது.