ரூ.38,424 கோடிக்கு இந்திய ஆயுதங்கள் ஏற்றுமதி

2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.38,424 கோடிக்கு பாதுகாப்புத் துறை சாா்ந்த ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.

அமெரிக்கா, ரஷியா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை முன்பு இந்தியா இறக்குமதி செய்து வந்தது. அந்த நிலை அண்மைக்காலமாக மாறி வருகிறது. இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே ஆயுதங்களைத் தயாரித்து, அதை நட்பு நாடுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்து வருகிறது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்தியா கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.21,083 கோடிக்கு வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்தது. பின்னா் கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.23,622 கோடிக்கு வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்திருந்தது.

2025-26-ஆம் நிதியாண்டில் ரூ.38,424 கோடிக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் செய்யப்பட்ட ஆயுத ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் ரூ.14,802 கோடி அதிகமாகும். அதாவது, நமது ஆயுத ஏற்றுமதி முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 62 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஏற்றுமதியாகும். இந்திய ஆயுத ஏற்றுமதியில் பொதுத் துறை நிறுவனங்கள் 54.84 சதவீதமும், தனியாா் நிறுவனங்கள் 45.16 சதவீதமும் பங்களிப்பு அளித்துள்ளன. இந்திய ஆயுத ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பதற்கு, இந்தியா சொந்தமாகத் தயாரிக்கும் பாதுகாப்புத் தளவாடங்கள் மீதும், நவீன ஆயுத தயாரிப்பு வலிமையின் மீதும் வெளிநாடுகள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்திருப்பதையே காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.