இந்தியாவும் சீனாவுமிடையிலான நேரடி பயண விமான சேவைகள், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. இது இந்தியா – சீனா உறவில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கான சீன தூதர் யூ ஜிங் தனது எக்ஸ் பக்கத்தில், ”இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் உண்மையாகி உள்ளது” என்று கூறியுள்ளார். அதன்படி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து இன்று முதல் விமானம் சீனாவின் குவாங்சோ நகருக்கு புறப்பட்டு சென்றது. இண்டிகோ நிறுவனத்தின் விமானம் இந்த சேவையை தொடங்கி உள்ளது. இண்டிகோவின் Airbus A320neo விமானம் இன்று கொல்கத்தாவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமான சேவை இனி தினமும் இருக்கும்.
அதேபோல் இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோ நகருக்கு விமான சேவையை இயக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. இந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்டமாக இண்டிகோ விமானம் டெல்லி – குவாங்சோ நகர் இடையே விமான சேவையை தொடங்கும்.
மேலும் நவம்பர் 9 ம்தேதி சீனாவில் இருந்து இந்தியாவுக்கு முதல் விமானம் வர உள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து டெல்லிக்கு அந்த விமானம் பயணிக்க உள்ளது. அதன்பிறகு வாரத்தில் 3 விமானங்கள் இந்த சேவையை தொடங்க உள்ளது. இந்த நேரடி விமான சேவையின் மூலமாக இந்தியாவில் இருந்து சீனாவுக்கும், சீனாவில் இருந்து இந்தியாவுக்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். இதனால் இருநாடுகள் இடையே சுற்றுலா, வர்த்தகம் சார்ந்த உறவுகள் அதிகரிக்கும்.
முன்னதாக நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையோன எல்லை பிரச்சனை மோதலாக மாறியது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டன. இதையடுத்து நம் நாடு சீனாவுடனான உறவை துண்டித்தது. கடந்த 5 ஆண்டுகளாக இருநாடுகள் இடையே சுமூக உறவு இல்லை. சீனாவுக்கான நேரடி விமான சேவை, சீன செயலிகள் அதிரடியாக தடை செய்யப்பட்டன.
ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்ததோடு, சீனாவையும் சீண்டி வருகிறார். இதனால் நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க பகையை மறந்து நம் நாடும், சீனாவும் கைகோர்த்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.





