டெல்லி: இந்திய ராணுவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
இதற்கிடையே ஆப்ரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட முக்கிய தீவிரவாதிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதில் லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் முகமது அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர்களின் விவரம் இப்போது வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களைக் குறிவைத்து இந்தியா இந்தத் துல்லியமான தாக்குதலை நடத்தியது. இதில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ராணுவத்தின் மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்திய ராணுவ தாக்குதலில் 5 முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா ராணுவத்தால் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் விவரத்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மே 7ம் தேதி இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் விவரத்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியா நடத்திய துல்லியமான தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா பொறுப்பாளர் முடாசர் காதியன் காஸ் என்ற அபு ஜூண்டல் கொல்லப்பட்டார். மேலும், ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த முகமது யூசுப் அசார் என்கிற உஸ்தாத், காலித் என்கிற அபு ஆகாஷாவும் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பொறுப்பாளர் ஹபீஸ் முகமது ஜமீல், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தளபதி முகமது ஹசன் கானும் இந்தியாவின் தாக்குதலால் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் அனைவருமே லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய இரு அமைப்புகளில் முக்கியமான பொறுப்பில் இருந்தவர்கள் ஆவர்.
லஷ்கர்-இ-தொய்பாவின் மூத்த தளபதியான முடாசர் எனப்படும் அபு ஜுண்டால் தான் லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைமையகமான முரிட்கேயில் உள்ள மர்காஸ் தைபாவின் பொறுப்பாளராக இருந்தார். அவரது உடலுக்கு பாகிஸ்தான் ராணுவம் மரியாதை அளித்துள்ளது. மேலும் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மற்றும் பாகிஸ்தான் பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் சார்பாக மலர்வளையம் வைக்கப்பட்டு இருக்கிறது. சர்வேதச பயங்கரவாதியான ஹபீஸ் அப்துல் ரவூஃப் தலைமையில் நடந்த இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் பஞ்சாப் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆகியோர் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஹபீஸ் முகமது ஜமீல் கொல்லப்பட்டுள்ளார். இவர் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மௌலானா மசூத் அசாரின் மூத்த மைத்துனர் ஆவார். பஹாவல்பூரில் மர்காஸ் சுப்ஹான் என்ற குழுவை வழிநடத்தி வந்துள்ளார். இளைஞர்களைத் தீவிரவாதம் நோக்கி இழுப்பது, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.
மசூத் அசாரின் மற்றொரு மைத்துனரான யூசுப் அசார் எனப்படும் உஸ்தாத் ஜி என்பவரும் கொல்லப்பட்டார். இவர் முகமது சலீம் அல்லது கோசி சஹாப் என்றும் அழைக்கப்படுகிறார்.. இவர் ஜெய்ஷ்-இ-முகமதுவின் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தார். ஆயுதப் பயிற்சிக்குப் பொறுப்பாளராக இருந்த இவருக்கு, ஜம்மு-காஷ்மீரில் ஏராளமான பயங்கரவாதத் தாக்குதல்களிலும் தொடர்பு இருக்கிறது.. குறிப்பாக 1999இல் மசூத் அசார் விடுவிக்கப்படக் காரணமாக இருந்த கந்தஹார் விமானக் கடத்தலிலும் இவருக்கு முக்கிய பங்கு இருந்தது.
லஷ்கர்-இ-தொய்பா தளபதியான காலித் என்பவர் நீண்ட காலமாகவே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகப் புகார்கள் உள்ளன. ஆப்கானிஸ்தானிலிருந்து ஆயுதக் கடத்தல் தொழிலையும் செய்வதாக இவர் மீது புகார்கள் உள்ளன. பைசலாபாத்தில் நடந்த இவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட துணை ஆணையர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த முகமது ஹசன் கானும் கொல்லப்பட்டார். இவர் ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பின் தளபதியான முஃப்தி அஸ்கர் கானின் மகன் ஆவார்.