இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு ‘பர்கவஸ்த்ரா’ குண்டு சோதனை வெற்றி

கோபால்பூர்: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு ராக்கெட் குண்டு ‘பர்கவஸ்த்ரா’ வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

சிறிய ரக ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதற்காக சோலார் டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (எஸ்டிஏஎல்) என்ற உள்நாட்டு நிறுவனம் குறைந்த செலவில் ட்ரோன் எதிர்ப்பு ராக்கெட் குண்டுகளை உருவாக்கியது. இது ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் நேற்று முன்தினம் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த ராக்கெட் குண்டுகள் கோபால்பூரில் நேற்று முன்தினம் 3 முறை பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ராணுவத்தின் வான்பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முதலில் பர்கவஸ்த்ரா தனித்தனியாகவும், அடுத்ததாக இரண்டு வினாடிகளுக்குள் 2 ராக்கெட் குண்டுகளையும் வீசி பரிசோதனை செய்யப்பட்டது. நான்கு ராக்கெட் குண்டுகளும், எதிர்பார்த்தபடி வான் இலக்கை துல்லியமாக தாக்கின. இந்த முன்னணி தொழில்நுட்பம் அதிகளவிலான ட்ரோன் தாக்குதலை முறியடிக்க உதவும்.

ட்ரோன் தாக்குதலை முறியடிக்க பல அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்படும். 20 மீட்டர் சுற்றளவில் 2.5 கி.மீ தூரத்துக்குள் வரும் ட்ரோன்களை பர்கவஸ்த்ரா மூலம் அழிக்க முடியும். இதில் உள்ள சென்சார்கள், ரேடாரில் சிக்காமல் குறைந்த உயரத்தில் பறந்து வரும் ட்ரோன்களை கண்டறியும். மலைப் பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் இதனை பயன்படுத்த முடியும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் ட்ரோன் எதிர்ப்பு ராக்கெட் குண்டு என்பதால், வான் பாதுகாப்பில் தற்சார்பு நிலையை எட்ட முடியும்.