டெல்லி: உலகளவில் ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கல்வி, மருத்துவம், விவசாயம், ஐடி என அனைத்து துறைகளிலும் ஏஐ தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சர்வதேச ஏஐ உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, 2047 ஆம் ஆண்டின்போது ஏஐ தொழில்நுட்பத்தில் உலகின் தலைசிறந்த 3 சக்திகளில் ஒரு நாடாக இந்தியா இருக்கும் என்று கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில், “2026 ஏஐ உச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாநில அரசுகள், அமைச்சர்கள், சர்வதேச தொழில்நுட்ப வல்லுநர்கள், பங்கு தாரர்கள், தொழில்துறையினர் பங்கேற்க உள்ளனர். அனைவருக்கும் நலன்.. அனைவருக்கும் மகிழ்ச்சி என்பதுதான் இந்த மாநாட்டின் தாரக மந்திரம். ஏஐ மூலம் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டுவதுதான் இதன் நோக்கம். இந்தியாவின் புதிய அத்தியாயத்தில் ஏஐ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தரவுகள், காலநிலை மாற்றம், வேளாண் உற்பத்தி, சுகாதாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றில் உள்ள சிக்கல்களை ஏஐ மூலம் தீர்வு காண திட்டமிட்டுள்ளோம். புதிய பொருளாதார வாய்ப்புகள், நகர்ப்புறம் – கிராமப் பகுதிகளுக்கு பாலமாக இயங்கி வாய்ப்புகளை அதிகரித்தலுக்கு திட்டமிட்டுள்ளோம்.மருத்துவத்தில் ஏஐ தொழில்நுட்பம் ஏற்கனவே பெரிய தாக்க்த்தை ஏற்படுத்தி வருகிறது. கல்வியிலும் ஏஐ கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலுக்கு உதவி செய்கிறது. விவசாயத்தை பொறுத்தவரை பயிர் மேலாண்மை, மண் வளம், காலநிலை உள்ளிட்டவற்றுக்கு வழிகாட்டுகிறது. அமுல் நிறுவனம் ஏஐ மூலம் 36 லட்சம் பெண் விவசாயிகளுக்கு பல்வேறு வழிநடத்துதல்களை வழங்குகிறது. உலக நாடுகள் எல்லாம் ஏஐ தொழில்நுட்பத்தால் பிரச்சனை ஏற்படுமோ என்று பயப்படுகிறார்கள். நாம் நம் பிரச்சனைகளை அதன் மூலம் சரிப்படுத்தி கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு தனி மனிதருக்கும் வளர்ச்சியை சாத்தியப்படுத்தற்கு ஏஐ தொழில்நுட்பத்தை ஆக்கவூர்வமாக பயன்படுத்துகிறோம். இது நாகரீக திருப்புமுனை. ஏஐ தொழில்நுட்பம் இந்திய ஐடி துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. 2030 ஆம் ஆண்டிற்குள் 400 பில்லியன் டாலர் வளர்ச்சியை ஐடி துறை எட்டும். சரியான வகையில் கையாண்டால் ஏஐ தொழில் நுட்பம் இந்தியாவின் வேலைத்திறனை மேம்படுத்தும். நம் இளைஞர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்தால் இதை சிறப்பாக நிர்வகிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.இதைப் பார்த்து பயப்படுத்த வேண்டியதில்லை. நாம் பாதுகாப்பான முறையில் தான் ஏஐ தொழில்நுட்பத்தை அணுகுகிறோம். தொழில்நுட்ப மாற்றத்தால் எந்த வேலையும் பாதிக்காது. சொல்லப்போனால் அந்த தொழில்நுட்பத்தால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இது ஏஐ தொழில்நுட்பத்திற்கும் பொருந்தும். தொழில்நுட்பம் மிகவும் கூர்மையான ஆயுதம். எந்த தொழில்நுட்பமாக இருந்தாலும் முடிவு எடுப்பது மனித சக்தி தான். இந்தியா ஏஐ தொழில்நுட்பத்தின் பவர் சென்டராக மாறுவதற்கான திறமை மற்றும் ஆற்றல் ஆகியவற்றை முழுமையாக கொண்டுள்ளது. 2047 ஆம் ஆண்டின்போது ஏஐ தொழில்நுட்பத்தில் உலகின் தலைசிறந்த 3 சக்திகளில் ஒரு நாடாக இந்தியா இருக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம். 2026-27 மத்திய பட்ஜெட் இதை மையமாக வைத்துதான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.







