டெல்லி: இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல் அளவு செப்டம்பர் மாதத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 7 மில்லியன் பீப்பாய்கள் ஏற்றமதி செய்யப்பட்ட நிலையில், செப்டம்பரில் 10.4 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது ஜூலை மாதத்தை விட கிட்டத்தட்ட 63 சதவீதமும் 103 சதவீதமும் அதிகமாகும். Reliance Industries மற்றும் Nayara Energy ஆகியவை பிரதான டீசல் ஏற்றுமதி நிறுவனங்களாக உள்ளன.
இந்தியாவில் இருந்து டீசலை வாங்க ஐரோப்பிய நாடுகளிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. எனவே, ஏற்றுமதி இந்த ஆண்டின் எஞ்சியுள்ள மாதங்களிலும் அதிக அளவில் நீடிக்க வாய்ப்புள்ளது. இதைபோல ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கத்தின் (எப்டா) உறுப்பு நாடுகளான ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு இந்தியா செய்து கொண்டது.
இதன் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான முதலீடு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதேநேரம் இதில் மேலும் 150 பில்லியன் டாலரை கூடுதலாக அதாவது மொத்தம் 250 பில்லியன் டாலர் (சுமார் ரூ.22 லட்சம் கோடி) அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டை எதிர்பார்ப்பதாக ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். இந்த 4 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவை குறிவைத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இது நிகழ்ந்துள்ளது.