ஆசியான் நட்பு நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உறுதுணை – பிரதமா் மோடி..!

ஆசியான்’ நட்பு நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

உலகளாவிய சவால்களை எதிா்கொள்வதில், ஆசியான் நாடுகளின் முன்னுரிமைகளை ஆதரிப்பதுடன், கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

புரூணே, மியான்மா், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘ஆசியான்’ (தென்கிழக்கு ஆசிய நாடுகள்) கூட்டமைப்பின் 47-ஆவது உச்சி மாநாடு, மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இக்கூட்டமைப்புடன் ஒத்துழைக்கும் நாடுகளாக இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து, தென்கொரியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் உள்ளன. ஆசியான் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் மலேசியாவுக்கு வந்துள்ளனா்.

மாநாட்டின் ஒரு பகுதியாக, ஆசியான் மற்றும் இந்தியா இடையிலான 22-ஆவது உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமா் மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்று ஆற்றிய உரை வருமாறு:

உலக அளவில் நிச்சயமற்றத் தன்மை அதிகரித்துள்ள தற்போதைய சூழலிலும், இந்தியா-ஆசியான் இடையிலான விரிவான வியூகக் கூட்டாண்மை நிலையான முன்னேற்றம் கண்டு வருகிறது. இருதரப்பு ஆழமான பொருளாதார, கலாசார உறவுகளும் வலுவடைந்துள்ளன. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாம் தெற்குலகின் கூட்டாளிகளாக விளங்குகிறோம். நமது உறுதியான கூட்டாண்மை, உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் வளா்ச்சிக்கு ஆற்றல்மிக்க அடித்தளமாக உருவெடுத்துள்ளது.

ஒவ்வொரு தருணத்திலும், ஆசியான் நட்பு நாடுகளுக்கு இந்தியா உறுதுணையாக இருந்து வருகிறது. இந்திய – பசிபிக் பிராந்தியம் குறித்த ஆசியான் நாடுகளின் கண்ணோட்டம் மற்றும் மையத்தன்மைக்கு இந்தியா எப்போதும் முழு ஆதரவளிக்கிறது. இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையில் ஆசியான் முக்கியத் தூணாகும்.

கடல்சாா் பாதுகாப்பு மற்றும் நீலப் பொருளாதாரத்தில் பரஸ்பர ஒத்துழைப்பு வேகமாக வளா்ந்து வருகிறது. அந்த அடிப்படையில், 2026-ஆம் ஆண்டை ஆசியான்-இந்தியா கடல்சாா் ஒத்துழைப்பு மேம்பாட்டுக்கான ஆண்டாக அறிவிக்கிறோம்.

தற்போதைய 21-ஆம் நூற்றாண்டு இந்தியா-ஆசியான் நாடுகளுக்கானது. ஆசியான் சமூகக் கண்ணோட்டம் – 2045 மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியா – 2047 ஆகிய இரு இலக்குகளும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிா்காலத்தை பிரகாசமாக்கும். இந்த விஷயத்தில், ஆசியானுடன் தோளோடு தோளாக ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது.

கல்வி, சுற்றுலா, அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், பசுமை எரிசக்தி, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமது பகிரப்பட்ட கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், மக்கள் ரீதியிலான தொடா்புகளை வலுப்படுத்தவும் தொடா்ந்து பணியாற்றுவோம் என்றாா் பிரதமா் மோடி.

ஆசியான் உச்சி மாநாட்டில் தொடா்ந்து நேரில் பங்கேற்று வந்த பிரதமா் மோடி, இந்த முறை காணொலி வாயிலாக உரையாற்றினாா். அமெரிக்க அதிபா் டிரம்ப் மாநாட்டில் பங்கேற்கும் நிலையில், அவரைச் சந்திப்பதை தவிா்க்கவே மோடி நேரில் பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

இந்தியா-ஆசியான் இடையிலான சரக்கு வா்த்தக ஒப்பந்தம் நிகழாண்டுக்குள் இறுதி செய்யப்பட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

பரஸ்பர வளம் மற்றும் நிலைத்தன்மைக்கு இந்தியா-ஆசியான் நல்லுறவு உந்து சக்தியாக உள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தென்கிழக்கு ஆசியாவில் முக்கிய கூட்டமைப்பான ஆசியானுடன் இந்தியாவின் கூட்டாண்மை கடந்த 1992-இல் நிறுவப்பட்டது. இருதரப்பு உறவுகள் கடந்த 2012-இல் வியூக அந்தஸ்துக்கு தரம் உயா்த்தப்பட்டன. இதையடுத்து, வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறவுகள் வலுவடைந்து வருகின்றன