சினிமா பட பாணியில்… ஆடி,பென்ட்லி, இன்னோவா என 3 கார்கள் மாறி மாறி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி..!!

டப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக 126 அடி உயரத்திலான கொடிக் கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்த எடப்பாடி பழனிசாமி, 5771 ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியை கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் குமரகுரு ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்வில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “தீயசக்தி திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார். எம்ஜிஆருக்குப் பிறகு அவர் என்ன நினைத்தாரோ அதனை சாதித்துக் காட்டிய தலைவர் ஜெயலலிதா. தன் மீதான ஏராளமான பொய் வழக்குகளை எதிர்கொண்டபடியே, இந்தியாவே பாராட்டும் அளவுக்கு அதிமுகவை வளர்த்தெடுத்தார். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு தொண்டர்கள் தான் வாரிசுகள்.

ஆனால், தற்போது தமிழகத்தில் குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கருணாநிதி முதல்வராக இருந்தார். பிறகு ஸ்டாலின் முதல்வரானார். தற்போது உதயநிதி ஸ்டாலினை உருவாக்கப் பார்க்கிறார்கள். ஸ்டாலின் அவர்களே தமிழகத்தில் அதிமுக இருக்கும் வரை உங்களின் கனவு நிறைவேறாது. வாரிசு அரசியல், மன்னர் ஆட்சிக்கு 2026 சட்டப்பேரவை தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

2026 தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் கனவு காண்கிறார். நாட்டு நடப்பு தெரியாமல் இறுமாப்போடு பேசி வருகிறார். எந்த மூலைக்கு சென்றாலும் அதிமுகதான் ஆட்சிக்கு வரும் என்ற குரல் ஒலித்துக்கொண்டே உள்ளது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், என்ன திட்டங்கள் கொண்டு வந்துள்ளார், அதன் மூலம் என்ன பலன் கிடைத்துள்ளது என்று சொல்லத் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “அண்மையில் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசு நிதியை தரவில்லை என குற்றம்சாட்டி புறக்கணித்த அவர், இப்போது ஓடோடிச் சென்று பிரதமரை சந்திக்கக் காரணம் என்ன? தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி மற்றும் திட்டங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் தமிழ்நாட்டை ஆளும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் தான்.

நாட்டு மக்களைப் பற்றி ஸ்டாலின் கவலைப்படவில்லை. டாஸ்மாக் ஊழலில் அமலாக்கத் துறை ரெய்டு மூலம் தனது வீட்டு மக்களுக்கு பிரச்னை என்றதும் ஓடோடி சென்றுள்ளார். நிதியைப் பெறுவதற்காக ஸ்டாலின் டெல்லி செல்லவில்லை. தனது குடும்ப உறுப்பினரான நிதியை காப்பாற்றவே சென்றுள்ளார்.

அதிமுகவை பொறுத்த வரை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னை என்று வந்துவிட்டால் அதற்கு முன்னுரிமை அளிக்கும் கட்சி. டெல்லி சென்றபோது 100 நாள் வேலைத் திட்டம் நிதியை அளிக்க கோரிக்கை வைத்தேன். சுமார் 3000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டது. ஸ்டாலினால் அதனை செய்ய முடிந்ததா? உள்துறை அமைச்சரிடம் மக்களுக்காக நான் வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

அதையெல்லாம் விட்டுவிட்டு மூன்று கார் மாறிச் சென்றதாக பேசுகிறார்.. ஏன் நான் நடந்துகூட செல்வேன். அது என்னுடைய விருப்பம். விமான நிலையத்தில் இருந்து இறங்கியதும் தம்பிதுரை காரில் சென்றேன். அவர் என்னை இறக்கிவிட்டுவிட்டு தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார். நான் அங்கிருந்து வேறு காரில் ஓட்டலுக்குச் சென்றேன். அங்கிருந்து வேறொரு நண்பர் கொடுத்த காரில் உள் துறை அமைச்சரை சந்திக்கச் சென்றேன். இதில் என்ன தவறு இருக்கிறது. உள் துறை அமைச்சரை ஏன் சந்தித்தீர்கள் என்று கேட்கிறார். அவர் என்ன பாகிஸ்தான் அமைச்சரா? இந்தியாவின் உள் துறை அமைச்சர் தானே?” என்று கேள்வி எழுப்பினார்.