கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மீன் பிடித்து மீனவர்கள் நூதன போராட்டம்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் வெள்ளியங்காடு மற்றும் பெல்லாதி குளங்களில் மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இதனிடையே ஒரு தரப்பினர் பெல்லாதி குளத்தில் மற்றொரு தரப்பினரை மீன்பிடிக்க விடாமல் தடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு வலையை விரித்து அதற்குள் சென்று மீன்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கூறும்போது, தற்போது உள்ள சங்கத்தில் நாங்களும் உறுப்பினர்களாக உள்ளோம். ஆனால் எங்களை மீன்பிடிக்க அனுமதிப்பதில்லை. இந்த குளத்தை நம்பி தான் நாங்கள் உள்ளோம். எங்கள் குடும்பங்கள் உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மீன்பிடி உபகரணங்களை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு நாங்கள் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதால் தற்கொலை செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளோம். உடனடியாக கலெக்டர் தலையிட்டு எங்களை மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.