கோவையில் பழமை வாய்ந்த கார்களின் அணிவகுப்பு..!

கோவையில் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தி வரும் கோவை விழாவை முன்னிட்டு கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள தனியார் கிளப்பில் வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பழைய மாடல் பென்ஸ், பியட் உள்ளிட்ட பல்வேறு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் கலந்து கொண்டன. 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டன.
இந்த வின்டேஜ் கார்களை மாவட்ட கலெக்டர் சமீரன், மற்றும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கார்களின் அணிவகுப்பை தொடங்கி வைத்தனர். ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொடங்கிய கார்களின் அணிவகுப்பு சரவணம்பட்டி வரை அணிவகுத்து சென்றன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வின்டேஜ் கார்களின் அணிவகுப்பை குழந்தைகள் பார்க்க வேண்டும் என்பதற்காக அழைத்து வந்ததாகவும், இந்த மாடல் கார்களை பழைய படங்களில் பார்த்து இருப்போம் அவற்றை நேரில் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.
அந்த காலத்தில் வாங்கப்பட்ட கார்களை இவ்வளவு பேர் பழைமை மாறாமல் வைத்திருப்பதே ஆச்சர்யம் உள்ளது. பழைய கார்களை பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது என்றனர்.வின்டேஜ் கார்கள் அணிவகுப்பில் கலந்து கொள்வதே பெருமைக்குரியது என அணிவகுப்பில் பங்கேற்ற கார் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.