காபூல்: டிடிபி எனப்படும் பாகிஸ்தான் தாலிபான்கள் அங்குள்ள ஷெரீப் அரசுக்குத் தலைவலியாக மாறியுள்ளது. பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தைக் குறிவைத்து டிடிபி தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதற்கிடையே அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் பாகிஸ்தான் ராணுவ தளபதியை நேரடியாக எச்சரித்துள்ளது. ஒரு ஆண்மகனாக இருந்தால் நேரடியாக மோதி பார்க்க வேண்டும் எனத் தாலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே இம்மாதத் தொடக்கத்தில் மோதல் வெடித்தது. அதாவது டிடிபி எனப்படும் பாகிஸ்தான் தாலிபான்கள் பாக். மண்ணில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த டிடிபி அமைப்பிற்கு ஆப்கான் தாலிபான்கள் ஆதரவு அளிப்பதாகவும், ஆப்கானில் இருந்தபடியே டிடிபி செயல்படுவதாகவும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தானை எச்சரிக்கும் வகையில் தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் தாலிபான்களின் இந்த வீடியோக்கள், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரை சாடும் வகையில் இருக்கிறது. அதில் ஒரு வீடியோவில் டிடிபி தளபதி ஒருவர் நேரடியாகவே முனீருக்கு மிரட்டல் விடுக்கிறார். பாகிஸ்தான் ராணுவம் தனது வீரர்களைப் போருக்கு அனுப்பக்கூடாது என்றும் உயர் அதிகாரிகள் நேரடியாகக் களத்தில் இறங்கிப் போரிட வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்படுகிறது.
கடந்த அக்டோபர் 8ம் தேதி கைபர் பக்துன்க்வாவின் குரம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோவும் இதில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் தாலிபான்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் 22 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பாகிஸ்தான் தாலிபான்கள் கூறுகிறார்கள்.
அதில் இன்னொரு வீடியோவில், பாகிஸ்தான் தாலிபான் அமைப்பின் மூத்த தளபதி காசிம் நேரடியாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த வீடியோவில் காசிம், “நீ மட்டும் ஒரு ஆம்பளையாக இருந்தால் எங்களை எதிர்த்து நின்று சண்டை போட்டுக் காட்டு.. நீ உன் தாயின் பாலை குடித்திருந்தால் எங்களுடன் சண்டையிட்டுக் காட்டு” என்று சவால் விடுக்கிறார்.
இந்த காசிமை பிடிக்க உதவுவோருக்கு அல்லது அவரை பற்றிய தகவல்களைத் தருவோருக்கு 10 கோடி பாகிஸ்தான் ரூபாய் வழங்கப்படும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்திருந்தது. ஆனால், அவரை பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்க முடியவில்லை. பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, அவர் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கிறார்.
ஓரிரு வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மோதல் வெடித்திருந்தது. இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. ஷெல் தாக்குதல்கள், வான்வழித் தாக்குதல்கள் என தொடர்ந்து நடந்தது. இதனால் இரு தரப்பிலும் பொதுமக்கள் உயிரிழப்பு கூட ஏற்பட்டது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே போர் வெடிக்கும் சூழல் உருவான நிலையில், கத்தார் மற்றும் துருக்கி உள்ளே வந்து மத்தியஸ்தம் செய்தது. அதைத் தொடர்ந்தே இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இருப்பினும், ஆப்கான் மண்ணில் செயல்படும் டிடிபி உள்ளிட்ட தீவிரவாதிகளை அழித்தால் மட்டுமே இந்த சமாதானம் நிலைக்கும் என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேநேரம் பாகிஸ்தானில் பல தாக்குதல்களை டிபிபி தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.. அங்கு முழுமையான ஒரு இஸ்லாமிய ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்பதே பாகிஸ்தான் தாலிபான்களின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.





