கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரின் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகர பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில் நடந்தது. இதில் துணை கமிஷனர்கள் கார்த்திகேயன், தேவநாதன், அசோக் குமார், திவ்யா ஆகியோர் பங்கேற்றனர்.
அவர்களிடம் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது :-மாநகர பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்க வருபவர்களின் பதிவேடுகள் கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும். அவர்களின் ஆதார் கார்டு அல்லது அடையாள அட்டை நகலை கட்டாயம் வாங்க வேண்டும். சந்தேக நபர்கள் யாரும் தங்க வந்தால் அவர்களின் விவரங்கள் குறித்து அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வந்து தங்கினால் அவர்கள் தொடர்பான அனைத்து தகவல் ஆவணங்களையும் பெறவேண்டும். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வந்தால் அவர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஓட்டல்களில் தங்கி இருப்பவர்கள் யாராவது உயிரிழந்தாலும் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் .சில ஓட்டலில் இருந்து எந்த தகவலும் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கும்போது அந்த தகவல்களை கொடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .இவ்வாறு அவர் கூறினார் இந்த கூட்டத்தில் கோவை மாநகர பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மேலாளர்கள்,போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்..