‘ஹிஜாப்’ சர்ச்சையல்ல.. அது ஒரு சதி… அது இஸ்லாமிய பெண்களை பின்னுக்கு தள்ளும் திட்டம்-. கேரளா ஆளுநரின் அதிரடி பேச்சு.!!

டெல்லி : இஸ்லாத்தில் அவசியமானது என ஐந்து விஷயங்கள் மட்டுமே உள்ளதாகவும் அவற்றில் ஹிஜாப் இல்லை எனவும் ஹிஜாப் சர்ச்சை முஸ்லிம் பெண்களை பின்னுக்குத் தள்ளும் சதியே தவிர சர்ச்சை இல்லை என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள சில உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முஸ்லீம் மாணவிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்துத்துவா மாணவர்கள் ஹிஜாப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்தனர்.

கல்வீச்சு போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு வன்முறை நடந்ததால் கர்நாடகாவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஹிஜாப் குறித்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் முஸ்லீம் சமூகத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.

ஹிஜாப் விவகாரம் சர்வதேச பிரச்சினையாக மாறும் வாய்ப்பு இருந்த நிலையில், வெளிநாடுகள் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டாம் என இந்தியா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனாலும் பிரச்சனை ஓயாத நிலையில் பல்வேறு தரப்பினரும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சில கருத்துக்கள் ஹிஜாப்புக்கு ஆதரவாகவும் சில கருத்துக்கள் சர்ச்சையை மேலும் வலுவாக்கும் வகையிலும் இருந்து வருவது பரபரப்பை மேலும் கூட்டி வருகிறது. இந்த நிலையில் இஸ்லாத்தின் அவசியமான ஐந்து விஷயங்கள் மட்டுமே உள்ளன எனவும் அவற்றில் ஹிஜாப் இல்லை என கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆரிப் முகமது கான் சமீபத்தில் கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பேசிய அவர்,” இஸ்லாத்தில் அவசியமான 5 விஷயங்கள் மட்டுமே, அவற்றில் ஹிஜாப் இல்லை எனவும், அரசியலமைப்பின் 25 வது பிரிவின் பாதுகாப்பைக் கோரும் எந்தவொரு அம்சமும் “நம்பிக்கை நடைமுறைக்கு இன்றியமையாததாகவும், உள்ளார்ந்ததாகவும் மற்றும் ஒருங்கிணைந்ததாகவும்” இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது என்றார்.

ஹிஜாப் தொடர்பாக நடந்து வரும் சர்ச்சை, முஸ்லிம் பெண்களை பின்னுக்கு தள்ளும் சதியே தவிர சர்ச்சை அல்ல என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். “மதத்திற்கும் கல்விக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை,” என்றும், இஸ்லாத்தில், “மதத்தின் நோக்கம் மனிதர்களை அறிவைப் பெறச் செய்வது” என்றும், முத்தலாக் தடைக்குப் பிறகு – மூன்று முறை தலாக் சொல்லி உடனடியாக விவாகரத்து செய்யும் நடைமுறை – முஸ்லீம் பெண்கள், விடுதலையை உணர்கிறார்கள். “அவர்கள் சுதந்திர உணர்வுடன் இருக்கிறார்கள். அவர்கள் கல்வியைத் தொடர்கிறார்கள். அவர்கள் பெரிய தொழிலில் சேருகிறார்கள், ஹிஜாப் சர்ச்சை ஒரு சதி” என்று அவர் மேலும் கூறினார்.