காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை… மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு ..!

மேட்டூர்/தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததாலும், தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது.

இதனால் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த 10-ம் தேதி நிறுத்தப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தாமரைக்கரை, தட்டக்கரை, பர்கூர், சென்னம்பட்டி வனப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், காவிரியின் துணை ஆறான பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதேபோல, சின்னாறு, தொப்பையாறு பகுதிகளிலும் மழை பெய்ததால், பாலாறு, காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு கடந்த 9-ம் தேதி விநாடிக்கு 122 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 10-ம் தேதி 163 கனஅடியாகவும், நேற்று முன்தினம் 2,528 கனஅடியாகவும், நேற்று காலை 9,345 கனஅடியாகவும் அதிகரித்தது.

இந்நிலையில், நேற்று மாலை4 மணிக்கு விநாடிக்கு 18,974 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட, நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைநீர்மட்டம் உயரத் தொடங்கிஉள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 31.31 அடியில் இருந்து 34.30 அடியாகவும், நீர் இருப்பு 8.05 டிஎம்சியில் இருந்து 9.34 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, பிற்பகலில் 9,500 கனஅடியாக அதிகரித்திருந்தது. இந்நிலையில், நேற்று காலை விநாடிக்கு 10ஆயிரம் கனஅடியாகவும், மாலைவிநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது.

இதற்கிடையே, காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடைவிதித்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.