ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாள்களாகவே கனமழை நீடிக்கிறது. மேலும் சில பகுதிகளில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் வௌளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பாதையில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 15 பேர் பலியாகினர். இந்நிலையில் நேற்று மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் முழுவதும் இதுவரை கனமழை, வௌளத்துக்கு 41 பேர் உயிரிழந்து விட்டனர். ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் வௌள நீர் சூழ்ந்துள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது. கனமழையால் சட்லெஜ், பியாஸ், ரவி ஆகிய ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்கிறது. இந்நிலையில் பஞ்சாபின் பதான்கோட் கிராமத்தில் கனமழை, வௌளத்தால் இடிந்து விழும் நிலையில் இருந்த ஒரு கட்டிடத்தில் பொதுமக்கள் சிலரும், அவர்களை மீட்க சென்ற சிஆர்பிஎப் வீரர்களும் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து குறிப்பிட்ட பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்ற ராணுவ வீரர்கள், அங்கு சிக்கி தவித்த பொதுமக்கள் 22 பேர் மற்றும் 3 சிஆர்பிஎப் வீரர்களை பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வௌள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.