ஹரியானா உள்ளாட்சி தேர்தல்: அதிக இடங்களை கைப்பற்றி பாஜக வெற்றி- உற்சாகத்தில் ஆம் ஆத்மி..!

ண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மட்டுமின்றி ஆம் ஆத்மிக்கும் உற்சாகத்தைத் தருவதாக அமைந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் இப்போது மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசே ஆட்சியில் உள்ளது. அங்குக் காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாகவே உள்ளது

இதற்கிடையே ஹரியானாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அதிகப்படியான இடங்களில் வென்றுள்ளது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் ஆம் ஆத்மியும் சில இடங்களில் வென்றுள்ளது.

ஹரியானாவில் இப்போது மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ள நிலையில், அங்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த ஹரியானா பஞ்சாயத்துத் தேர்தலில் பாஜக 58 இடங்களைக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.. காங்கிரஸ் 26 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கிடையில், ஆம் ஆத்மியும் முதல்முறையாக ஹரியானாவில் உள்ளாட்சித் தேர்தலில் ஆறு இடங்களில் வென்றுள்ளது.

ஹரியானாவில் 143 பஞ்சாயத்துகள் மற்றும் 22 ஜில்லா உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தற்போது வரை பாஜக 58 இடங்களில் வென்றுள்ள நிலையில், காங்கிரஸ் 26 இடங்களிலும் ஆம் ஆத்மி 5 இடங்களிலும் வென்றுள்ளது. அதைத் தொடர்ந்து ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) 14 இடங்களையும் இந்தியத் தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) 6 இடங்களையும் பகுஜன் சமாஜ் கட்சி 5 இடங்களையும் கைப்பற்றி உள்ளது.

சிர்சாவில் ஜிலா பரிஷத்தில் இருந்து ஐஎன்எல்டியின் கரண் சௌதாலா அதிகபட்சமாக 600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும், மற்ற அரசியல் கட்சிகளைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களே அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றினர். அரசியல் கட்சியின் சின்னமில்லாமல் சுயேச்சையாகக் களமிறங்கிய 95 பேர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை இன்னும் கூட சில இடங்களில் தொடர்கிறது.

ஹரியானாவில் உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. ஹரியானாவில் 411 உறுப்பினர்களைக் கொண்ட 22 ஜில்லா பரிஷத்கள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் வெல்லும் 411 உறுப்பினர்கள் தான் இந்த 22 ஜில்லா பரிஷத்களுக்கு தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அதேபோல அங்கு 143 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் வெல்லும் 3,081 உறுப்பினர்கள் அந்தந்த தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இது தொடர்பாக அம்மாநில தேர்தல் ஆணையர் தனபத் சிங் கூறுகையில், “போலீசார் முன்னிலையில் தான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு அங்கு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. 90 இடங்களைக் கொண்ட ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 46 இடங்களில் வெல்ல வேண்டும். இருப்பினும், பாஜகவால் 40 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் முந்தைய தேர்தலில் காட்டிலும் கூடுதல் இடங்களில் வென்ற போதிலும், அவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து பாஜக அங்கு இதர கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது..