சென்னை: விஜய் செய்தது கிரிமினல் குற்றம் இல்லை, நான் விஜய்க்கு துணையாக நிற்பேன் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த எச்.ராஜா திடீரென அவருக்கு ஆதரவு தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நடிப்பில் உருவாகியுள்ள கந்தன் மலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா விஜய் செய்தது கிரிமினல் குற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எச்.ராஜா, “தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஆனால் இந்த கரூர் விவகாரத்தில் அவருக்கு தான் துணையாக நிற்பேன். பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று விஜய் பாடியதில் என்ன தவறு?
விஜய் என்ன தவறு செய்தார்? விஜய் நான்கு மணி நேரம் பிரச்சாரக் கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஒரு குற்றமா? எம்ஜிஆர் 36 மணி நேரம் தாமதமாக வந்தாலும் மக்கள் காத்திருந்து பார்ப்பதை நேரில் பார்த்தவன் நான். அது ஒரு குற்றம் என்று சொல்ல முடியுமா? வரும் வழியில் கூட்டம் இருந்திருக்கலாம். அதனால் கூட தாமதம் ஆகியிருக்கலாம். ஆனால் அது கிரிமினல் குற்றம் இல்லை.
ஆனால் கரூரில் அந்த இடத்தில் அனுமதி கொடுத்த எஸ்.பி.யை முதலில் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். திமுகவின் கரை வேட்டி கட்டாத உறுப்பினர்களாக கரூர் காவல்துறை அதிகாரிகள் உள்ளனர். வேங்கைவயல் சம்பவத்துக்கு திருமாவளவன் நேரில் சென்றாரா? ஆளும் திராவிட அரசுக்கு சொம்படிப்பதை தவிர வேறு வேலையே கிடையாதா அவருக்கு? ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்? திமுகவில் அறிவாலய எடுபிடியாக இருக்கிறார். விஜய் நான்கு மணி நேரம் பிரச்சாரக் கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஒரு குற்றமா?” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
முன்னதாக திருச்சியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் “தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு, காவல் துறை அஞ்சுகிறதா? தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும்.
இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். இருவருக்கும் வேறு வேறு நீதியா? விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாததற்கு திமுக – தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா என கேள்வி எழுப்பலாமா? காவல்துறை இது போன்ற ஓர வஞ்சனையை நிறுத்திக் கொள்ள வேண்டும். விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என யார் அழுத்தம் கொடுத்தது” என்று காட்டமாகப் பேசி இருந்தார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டம் மிகுந்த அளவில் இருந்ததால் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் தலைமறைவாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை தேடிப் பிடிக்க 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இவர்களும் இருவரும் முன்ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் தான் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.