தமிழகத்தில் பான் மசாலா பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அவை வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படுவதும், கடைகளில் மறைமுகமாக விற்பனைச் செய்யப்படுவதும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்கள் விற்பனைக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, 2013-ம் ஆண்டு மே 23ம் தேதி முதல் புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை அரசு அமல்படுத்தியிருந்தது. இந்த தடை ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் புகையிலை மற்றும் நிகோடினை சேர்மமாக கொண்ட உணவு பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், வாகனங்களில் எடுத்து செல்லுதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடைக்கான கெடு முடிவடைந்தது. இந்நிலையில், மேலும் ஓராண்டுக்கு 2026ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி வரை குட்கா, பான் மசாலா பொருட்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. எனினும் நிஜமாகவே இவற்றைத் தடை செய்யக் கோரியும், போலீசார் பல இடங்களில் கடைகளில் விற்பனைச் செய்வதைக் கண்டுக் கொள்ளாமல் பணம் வாங்கிச் செல்வதாகவும் பொதுமக்கள் புலம்புகின்றனர்.