அடிதூள்!! இனி வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு..!!

பொதுமக்கள் வாங்கும் வீடு மற்றும் மனை உள்ளிட்ட சொத்துக்களை பத்திரப் பதிவு செய்ய, சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்வது அவசியம்.

இதற்காக தினசரி டோக்கன் முறையில் பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது. விஷேச நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இனி சொத்துக்களை பத்திரப் பதிவு செய்வதற்கு, யாரும் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் இனி ஆன்லைன் முறையில் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவை மேற்கொள்ள முடியும். இதற்காக பத்திரப் பதிவு இணையதளத்தில் ‘ஸ்டார் 3.0’ என்ற புதிய மென்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.

சார்பதிவாளர் அலுவலகத்தில் இதுவரை ‘ஸ்டார் 2.0’ என்ற மென்பொருள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் ‘ஸ்டார் 3.0’ மென்பொருள் புதிதாக சேர்க்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதற்கான இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், பத்திரப்பதிவு இணையதளத்தில் ஸ்டார் 3.0 சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான சோதனை முயற்சியும் வெற்றி கண்டுள்ள நிலையில், வெகு விரைவில் பத்திரப்பதிவை எங்கிருந்து வேண்டுமானாலும் மேற்கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சொத்துக்களை வாங்கும் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்யும் வகையில், தற்போது 18 புதிய சேவைகள் இந்த மென்பொருளில் கிடைக்கும். ஆன்லைன் பத்திரப்பதிவில் டிஜிட்டல் கையொப்பமிட்டு, டிஜிட்டல் வடிவிலேயே பத்திரங்கள் உரிமையாளருக்கு கிடைக்கும்.

ஆன்லைன் முறையில் பத்திரப் பதிவு முறை மேற்கொள்ளப்பட இருப்பதால், காகிதம் இல்லா அலுவலகம் என்பது சாத்தியமாகி உள்ளது. அதோடு கியூ.ஆர். கோடு முறையில் பொதுமக்கள் கட்டணங்களை செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட மண்டலங்களில் ஸ்டார் 3.0 மென்பொருளை பயன்படுத்தி சோதனை முறையில் பத்திரப் பதிவுகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. இந்நிலையில் முதல்வர் முன்னிலையில் இதற்கான துவக்க விழா விரைவில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

துவக்க விழா முடிந்த பிறகு, தமிழ்நாடு முழுக்க எங்கிருந்து வேண்டுமானாலும் பத்திரப்பதிவை செய்யும் முறை அமலுக்கு வந்து விடும் என பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வார இறுதி நாட்கள், விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் விரும்பும் நேரத்தில் பத்திரப் பதிவை மேற்கொள்ள முடியும்.

சார்பதிவாளர் அலுவலகத்திற்கு காகித வடிவிலான ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது.

அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டதால் பத்திரங்களும் டிஜிட்டல் வடிவிலேயே கிடைக்கும்.

சொத்தின் வில்லங்க சான்றிதழை கூட ஆன்லைனில் பெற முடியும்.

சான்றிடப்பட்ட பத்திரப் பிரதியை 3 நாட்களுக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.